தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 28 ஆயிரம் பேர் உயிரிழப்பு மராட்டியத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பலி + "||" + Covid death toll crosses 28,000 mark; biggest spurt in July cases in Karnataka, Andhra Pradesh

இந்தியாவில் கொரோனாவுக்கு 28 ஆயிரம் பேர் உயிரிழப்பு மராட்டியத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பலி

இந்தியாவில் கொரோனாவுக்கு 28 ஆயிரம் பேர் உயிரிழப்பு மராட்டியத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்குள் புதிதாக 37 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. முந்தைய நாளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. ஆனாலும் கடந்த 6 நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.


புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 62.72 சதவீதம் பேர், அதாவது 7 லட்சத்து 24 ஆயிரத்து 578 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் 4 லட்சத்து 2 ஆயிரத்து 529 பேர் ஆஸ்பத்திரியிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் மராட்டிய மாநிலத்தில் 176 பேரும், கர்நாடகாவில் 72 பேரும், தமிழகத்தில் 70 பேரும், ஆந்திராவில் 54 பேரும், உத்தரபிரதேசத்தில் 46 பேரும், மேற்குவங்காளம் மற்றும் டெல்லியில் தலா 35 பேரும், குஜராத்தில் 20 பேரும், மத்தியபிரதேசத்தில் 17 பேரும், ஜம்மு காஷ்மீரில் 10 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், பஞ்சாபில் 8 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும், அரியானா மற்றும் ஒடிசாவில் தலா 6 பேரும், ஜார்கண்டில் 4 பேரும், உத்தரகாண்டில் 3 பேரும், திரிபுரா மற்றும் மேகாலயாவில் தலா 2 பேரும், அசாம், கோவா, சத்தீஸ்கார், கேரளா மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரும் என 24 மணி நேரத்தில் மொத்தம் 587 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு புதிதாக 8,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக உயிரிழந்தவர்களுடன் சேர்த்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் நேற்று புதிதாக 4,965 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதுடன், 75 பேரின் உயிரையும் கொரோனா காவு வாங்கி இருக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆகவும், பலி எண்ணிக்கை 2,626 ஆகவும் உயர்ந்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் கொரோனாவால் 1 லட்சத்து 23 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3,663 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், குஜராத், தெலுங்கானா, மேற்குவங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதில் 4-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 67 ஆயிரம் பேருக்கும், 10-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 30 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

உயிரிழப்பை பொறுத்தவரையில் கர்நாடகாவில் 1,403 பேரும், ஆந்திராவில் 696 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,192 பேரும், குஜராத்தில் 2,162 பேரும், தெலுங்கானாவில் 422 பேரும், மேற்குவங்காளத்தில் 1,147 பேரும், ராஜஸ்தானில் 568 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.