தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 45,720 பேருக்கு தொற்று உறுதிபுதிதாக 1,129 பேர் உயிரிழப்பு + "||" + Corona infection confirmed 45,720 infections in a single day

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 45,720 பேருக்கு தொற்று உறுதிபுதிதாக 1,129 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 45,720 பேருக்கு தொற்று உறுதிபுதிதாக 1,129 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 45,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த நோயால் புதிதாக 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 45 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மராட்டிய மாநிலத்தில் 10,576 பேரும், தமிழகத்தில் 5,849 பேரும், கர்நாடகாவில் 4,764 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,300 பேரும், மேற்குவங்காளத்தில் 2,291 பேரும், தெலுங்கானாவில் 1,554 பேரும், பீகாரில் 1,417 பேரும், அசாமில் 1,390 பேரும், டெல்லியில் 1,227 பேரும், ஒடிசாவில் 1,078 பேரும், கேரளாவில் 1,038 பேரும், குஜராத்தில் 1,020 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் உறுதியான மொத்த பாதிப்பில், 75 சதவீத பாதிப்பு மேற்கண்ட 12 மாநிலங்களில்தான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து, நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63.18 சதவீதம் பேர், அதாவது 7 லட்சத்து 82 ஆயிரத்து 607 பேர் சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அந்த புள்ளிவிவரப் பட்டியலில், தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் புதிதாக 518 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. விடுபட்டு இருந்த 444 கொரோனா மரணங்களை பலி எண்ணிக்கையுடன் இணைத்ததாலேயே தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் 280 பேரும், ஆந்திராவில் 65 பேரும், கர்நாடகாவில் 55 பேரும், மேற்குவங்காளத்தில் 39 பேரும், உத்தரபிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 29 பேரும், குஜராத்தில் 28 பேரும், மத்தியபிரதேசத்தில் 14 பேரும், ஜம்மு காஷ்மீரில் 10 பேரும், தெலுங்கானா மற்றும் ஜார்கண்டில் தலா 9 பேரும், அரியானாவில் 8 பேரும், அசாம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் தலா 6 பேரும், ஒடிசாவில் 5 பேரும், கோவா மற்றும் உத்தரகாண்டில் 2 பேரும், கேரளா, புதுச்சேரி, திரிபுரா மற்றும் சண்டிகாரில் தலா ஒருவரும் என மொத்தம் புதிதாக 1,129 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29,861 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 12 ஆயிரத்து 556 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கீழே உள்ளது.

பாதிப்பை பொறுத்தவரையில், கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்து 37 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேசிய தலைநகர் டெல்லியில் பாதிப்பு 1¼ லட்சத்தை தாண்டிவிட்டது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் வருமாறு:-

கர்நாடகா (75,833), ஆந்திரா (64,713), உத்தர பிரதேசம் (55,588), குஜராத் (51,399), மேற்குவங்காளம் (49,321), தெலுங்கானா (49,259), ராஜஸ்தான் (32,334), பீகார் (30,369), அரியானா (28,186), அசாம் (26,772), மத்தியபிரதேசம் (24,842), ஒடிசா (19,835), ஜம்மு காஷ்மீர் (15,711), கேரளா (15,032), பஞ்சாப் (11,301), ஜார்கண்ட் (6,485), சத்தீஸ்கார் (5,968), உத்தரகாண்ட் (5,300), கோவா (4,176), திரிபுரா (3,449), புதுச்சேரி (2,300), மணிப்பூர் (2,060), இமாசலபிரதேசம் (1,725), லடாக் (1,206), நாகாலாந்து (1,084), அருணாசலபிரதேசம் (949), சண்டிகார் (793), தாதர்நகர் ஹவேலி (733), மேகாலயா (514), சிக்கிம் (438), மிசோரம் (317), அந்தமான் நிகோபார் தீவு (221).