தேசிய செய்திகள்

2 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்தது + "||" + 1 lakh infected in 2 days: Corona infection in India crosses 13 lakh

2 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்தது

2 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்தது
2 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானதன் மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்துள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் முதன் முதலாக சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து மெல்ல மெல்ல பரவ தொடங்கிய கொரோனா, இந்தியாவில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மாத தொடக்கத்தில் தினந்தோறும் சுமார் 20 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி வந்த கொரோனா, கடந்த 2 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது. இதனால் கடந்த 23-ந் தேதி 12 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 13 லட்சத்தை கடந்தது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், புதிதாக 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. இதில் சுமார் 8½ லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், இன்னும் 4 லட்சத்து 56 ஆயிரத்து 71 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு மட்டும் 3 லட்சத்து 57 ஆயிரத்து 117 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 737 பேருக்கும், 3-வது இடம் வகிக்கும் டெல்லியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 389 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள கர்நாடகாவில் 85,870 பேருக்கும், ஆந்திராவில் 80,858 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 60,771 பேருக்கும், மேற்குவங்காளத்தில் 53,973 பேருக்கும், குஜராத்தில் 53,545 பேருக்கும், தெலுங்கானாவில் 52,466 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதேபோல ராஜஸ்தானில் 34,178, பீகாரில் 33,926, அசாமில் 29,921, அரியனாவில் 29,755, மத்தியபிரதேசத்தில் 26,210, ஒடிசாவில் 22,693, கேரளாவில் 16,995, ஜம்மு காஷ்மீரில் 16,782, பஞ்சாபில் 12,216, ஜார்கண்டில் 7,493, சத்தீஸ்காரில் 6,731, உத்தரகாண்டில் 5,445, கோவாவில் 4,540, திரிபுராவில் 3,759, புதுச்சேரியில் 2,515, மணிப்பூரில் 2,146, இமாசலபிரதேசத்தில் 1,954, லடாக்கில் 1,246, நாகாலாந்தில் 1,239, அருணாசலபிரதேசத்தில் 1,056, சண்டிகாரில் 823, தாதர்நகர் ஹவேலியில் 815, மேகாலயாவில் 588, சிக்கிமில் 477, மிசோரத்தில் 361, அந்தமான் நிகோபார் தீவில் 259 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆட்கொல்லி வைரசின் பிடியில் சிக்கி ஒரே நாளில் 757 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மராட்டிய மாநிலத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 13 ஆயிரத்து 132 ஆகும்.

டெல்லியில் 3,777 பேரும், தமிழகத்தில் 3,409 பேரும், குஜராத்தில் 2,278 பேரும், கர்நாடகாவில் 1,724 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,348 பேரும், மேற்குவங்காளத்தில் 1,290 பேரும், ஆந்திராவில் 933 பேரும், மத்தியபிரதேசத்தில் 791 பேரும், ராஜஸ்தானில் 602 பேரும், தெலுங்கானாவில் 455 பேரும், அரியானாவில் 382 பேரும், ஜம்மு காஷ்மீரில் 296 பேரும், பஞ்சாபில் 282 பேரும், பீகாரில் 220 பேரும், ஒடிசாவில் 120 பேரும், அசாமில் 76 பேரும், ஜார்கண்டில் 70 பேரும், உத்தரகாண்டில் 60 பேரும், கேரளாவில் 54 பேரும், சத்தீஸ்காரில் 36 பேரும், புதுச்சேரியில் 35 பேரும், கோவாவில் 29 பேரும், சண்டிகாரில் 13 பேரும், இமாசலபிரதேசம் மற்றும் திரிபுராவில் தலா 11 பேரும், மேகாலயாவில் 5 பேரும், அருணாசலபிரதேசத்தில் 3 பேரும், லடாக் மற்றும் தாதர்நகர் ஹவேலியில் தலா 2 பேரும், நாகாலாந்தில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.