தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: அம்பாலா விமானப்படை தளத்தில் உற்சாக வரவேற்பு + "||" + Raphael warplanes arrive in India: enthusiastic welcome at Ambala Air Force Base

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: அம்பாலா விமானப்படை தளத்தில் உற்சாக வரவேற்பு

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: அம்பாலா விமானப்படை தளத்தில் உற்சாக வரவேற்பு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணித்து, இந்தியா வந்தன. அம்பாலா விமானப்படை தளத்தில் அவற்றுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அம்பாலா, 

இந்திய விமானப்படையின் வலிமையை பெருக்கும் வகையில் 36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்தது.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 23-ந் தேதி, ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் செய்து கொண்டது.

ஆனால் ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தின. குறிப்பாக ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததிலும், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை விட்டு விட்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததிலும் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறின.

ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களும், கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கு மத்தியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் சென்றிருந்தார்.

அப்போது 36 ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானத்துக்கு ராஜ்நாத் சிங் பூஜை செய்தது நினைவுகூரத்தக்கது.

அதைத் தொடர்ந்து 36 போர் விமானங்களில் முதல் தொகுதியாக 10 விமானங்கள் தயார் ஆயின. அவற்றில் 5 விமானங்கள், ஜூலை மாதம் 29-ந் தேதி (நேற்று) அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து இறங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி கடந்த திங்கட்கிழமை மத்திய அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், “10 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் 5 விமானங்கள், பிரான்சில் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருக்கும். 5 விமானங்கள் இந்தியா வருகின்றன. 36 விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்” என கூறப்பட்டிருந்தது.

இதன்படி 5 ரபேல் விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரமான போர்டியாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமான தளத்தில் இருந்து 27-ந் தேதி புறப்பட்டன. 7 மணி நேரம் பறந்த நிலையில் அந்த விமானங்கள் வரும்வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்தாப்ரா விமான தளத்தில் தரை இறங்கி பின்னர் பயணத்தை தொடர்ந்தன.

30 ஆயிரம் அடி உயரத்தில் அவை பறந்தபோது, நடுவானில் பிரான்ஸ் டேங்கர் விமானத்தில் இருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டன.

7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பறந்து வந்த அந்த விமானங்கள் நேற்று பிற்பகல் 3.10 மணிக்கு, இந்திய மண்ணை வெற்றிகரமாக தொடுகிற வகையில் அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து தரை இறங்கின. அந்த விமானங்களுக்கு மரபுப்படி தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, அவற்றை இரண்டு சுகோய் 30 எம்.கே.ஐ. விமானங்கள் வரவேற்று பின்தொடர்ந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை சரித்திரத்தில் நேற்றைய நாள் ஒரு மகத்தான நாளாக பதிவானது.

5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்ததை பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றுள்ளார். இதையொட்டி அவர் சமஸ்கிருத மொழியில் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அம்பாலா விமானப்படை தளத்தில் ரபேல் போர் விமானங்கள் வந்து தரை இறங்கிய சிறிய அளவிலான காட்சி தொகுப்பு வீடியோவையும் அவர் இணைத்து இருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த பதிவில், “நாட்டை பாதுகாப்பதை விட சிறந்த சபதம் எதுவும் இல்லை” என குறிப்பிட்டிருந்தார். இதையொட்டி டுவிட்டரில் உருவாக்கப்பட்ட ‘ரபேல் இன் இந்தியா’ என்ற பெயரிலான ‘ஹேஷ்டேக்’ சமூக ஊடக ஆர்வலர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது.

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்ததற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “அம்பாலாவில் பறவைகள் (ரபேல் போர் விமானங்கள்) பத்திரமாக வந்து தரை இறங்கின” என குறிப்பிட்டார்.

மேலும், “இந்திய விமானப்படையின் புதிய திறனைப்பற்றி யாராவது கவலைப்பட வேண்டுமானால், அவர்கள் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புவோராகத்தான் இருப்பார்கள்” என குறிப்பிட்டார். சமீப காலமாக எல்லையில் இந்தியாவிடம் வாலாட்டி வருகிற சீனாவுக்கு விடப்பட்ட மறைமுக செய்தியாக இது அமைந்துள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

ராஜ்நாத் சிங், ரபேல் போர் விமானங்கள் பற்றி மேலும் கூறுகையில், “இந்தியாவில் ரபேல் போர் விமானங்கள் வந்திறங்கி இருப்பது ராணுவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையின் திறன்களில் புரட்சியை ஏற்படுத்தும்” எனவும் குறிப்பிட்டார்.

இந்தியா வந்து சேர்ந்துள்ள ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் அங்கம் ஆகி விட்டன.

இருந்தபோதிலும், அவற்றை முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கான விழா, ஆகஸ்டு மாத மத்தியில் நடைபெறும்; இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து ரபேல் போர் விமானங்கள் இறங்கியதையொட்டி, அந்தப் பகுதியில் தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானப்படை நிலைய பகுதியில் படங்கள், வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த விமானப்படை தளத்தின் 3 கி.மீ. சுற்றளவில் போலீஸ் படையினர் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தனர். அம்பாலா விமானப்படை தளத்தில் ரூ.400 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

எல்லையில் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மோதல் போக்கு நிலவி வருகிற தருணத்தில், விமானப்படையின் வலிமையை பெருக்கும் வகையில் ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்து இருப்பது எந்தவொரு சவாலையும் சந்திக்க புதிய நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைக்கிறது - சீனா சீற்றம்
சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைத்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
2. கொரோனா தொற்று பாதிப்பு:இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற இரண்டாவது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
3. ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
4. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
5. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்