மாநில செய்திகள்

தமிழகத்தில் 20,204 கோவில்கள் திறப்பு; 21,131 கோவில்கள் அடைப்பு: ஐகோர்ட்டில் இந்து அறநிலையத்துறை தகவல் + "||" + 20,204 temples opened in Tamil Nadu; 21,131 temples closed: Hindu Charities Department information in HC

தமிழகத்தில் 20,204 கோவில்கள் திறப்பு; 21,131 கோவில்கள் அடைப்பு: ஐகோர்ட்டில் இந்து அறநிலையத்துறை தகவல்

தமிழகத்தில் 20,204 கோவில்கள் திறப்பு; 21,131 கோவில்கள் அடைப்பு:  ஐகோர்ட்டில் இந்து அறநிலையத்துறை தகவல்
தமிழகத்தில் 20,204 கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது என்றும், 21,131 கோவில்கள் அடைக்கப்பட்டு உள்ளது என்றும் சென்னை ஐகோர்ட்டில் இந்து அறநிலையத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ‘தினமலர்’ திருச்சி, வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

கொரோனா ஊரடங்கினால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோர் வருமானம் இழந்து, பெரும் சிரமத்தில் உள்ளனர். கோவில்கள் மூடப்பட்டாலும், அன்றாட பூஜைகளை நடத்துவதற்காக, இவர்கள் அனைவரும் தினமும் கோவிலுக்கு வந்து வழக்கம்போல் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் கோவில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் உபரி நிதியாக பராமரிக்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.300 கோடி இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ளது. அந்த நிதியின் மூலம், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன? அதில், பூசாரிகள், ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்ற விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வக்கீல் ஆர்.வெங்கடேஷ், “கிராமப்புறங்களில் உள்ள பெரிய கோவில்களை தவிர, ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள 20 ஆயிரத்து 204 கோவில்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள 21 ஆயிரத்து 131 கோவில்கள், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன” என்று கூறினார்.

மேலும், “மூடப்பட்டுள்ள கோவில்களில் உள்ள ஊழியர்களை பொறுத்தவரை, ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை தவிர்த்து, கூடுதலாக 2 மாதங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது” என்றும் அவர் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஆகஸ்டு 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.