மாநில செய்திகள்

புதிய தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது; தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் + "||" + The new national education policy should not be implemented; DMK Resolution at the meeting of District Secretaries

புதிய தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது; தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

புதிய தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது; தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* கருணாநிதியின் 2-வது நினைவு தினமான ஆகஸ்டு 7-ந்தேதியன்று, நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காக்க இரவு-பகலாக பணியாற்றி வரும் கொரோனா போராளிகள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்ய வேண்டும். ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

* மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு என சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு போற்றுதலுக்குரியது. கருணாநிதி வழியில் அயராது போராடி இந்த வழக்கில் சமூகநீதிக்கான நீதித் துறையின் உறுதியைப் பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டம் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

* புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை வெளியிட்டு, அதன்மீது கருத்துக் கேட்பும் நடத்தப்பட இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையிலும், மாநில உரிமைகளுக்கு விரோதமானதாகவும் உள்ள சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

* மழலைக் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும் என்கிற தேசியக் கல்விக் கொள்கை தி.மு.க. அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே நாடாளுமன்றம் கூடி கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது. இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும், அ.தி.மு.க. அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும்.  மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.