தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கை: எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன? + "||" + New education policy: What do the opposition say?

புதிய கல்வி கொள்கை: எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?

புதிய கல்வி கொள்கை: எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?
புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய கல்விக்கொள்கை தொடர்பாக எதிர்க்கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அது வருமாறு:-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர்:

புதிய கல்விக்கொள்கையில் வரவேற்க நிறைய இருக்கிறது. நம்மில் சிலர் அளித்த பல பரிந்துரைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. எவ்வாறு ஆயினும் இது ஏன் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்ற கேள்வி உள்ளது.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்:

புதிய கல்விக்கொள்கையின் நோக்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான். இதன்படி, புதிய தலைமுறையை வடிவமைக்கும் முயற்சியில், படிப்புகளுக்கு சிறப்பு வர்ணம் கொடுக்கப்படும். கல்விக்கொள்கையில் எந்த மாற்றமும் அல்லது துறையின் பெயரில் செய்யும் எந்த மாற்றமும் எதையும் மாற்றப்போவதில்லை. குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எந்த குழப்பமும் ஏற்படாதவாறு கல்வி முறை இருக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி:

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கையானது, கல்விச்சந்தையை உருவாக்குவதற்கும், அரசுப்பள்ளிகள் மூலம் கல்வியை உலக மயமாக்குவதை உறுதி செய்வதில் இருந்து விலகிச்செல்வதற்கும், ஏழைகளுக்கும், சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளுக்கும் தரமான கல்வி அளிப்பதில் இருந்து விலகிச்செல்வதற்கும் அடிப்படை மாற்றத்தை கொண்டு வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா:

புதிய கல்விக்கொள்கை முற்போக்கு ஆவணம் ஆகும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டம் ஏதும் இல்லை. தற்போதைய கல்வி முறையின் குறைபாடுகளை அங்கீகரித்துள்ளது. பழைய மரபுகளின் அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லை. புதிய கல்விக்கொள்கை ஒழுங்குபடுத்தப்பட்ட, மோசமாக நிதி அளிக்கப்பட்டுள்ள கல்வி மாதிரிக்கு பரிந்துரைக்கிறது. இது பள்ளிகளில் தரமான கல்வி அளிப்பதற்கான அரசின் பொறுப்பில் இருந்து தப்பிக்கும் முயற்சி ஆகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி:

அரசியல் அமைப்பு சட்டப்படி கல்வி பொது பட்டியலில் உள்ளது. ஆனால் பல்வேறு மாநில அரசுகள் பதிவு செய்துள்ள அனைத்து ஆட்சேபனைகளையும், எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு புதிய கல்விக்கொள்கையை ஒரு தலைப்பட்சமாக திணிப்பது மத்திய அரசின் கடும் மீறல் ஆகும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும்.  இவ்வாறு எதிர்க்கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.