தேசிய செய்திகள்

கிழக்கு லடாக்கில் படை விலக்கல் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை; மத்திய அரசு தகவல் + "||" + Deployment in eastern Ladakh is not yet complete; Central Government

கிழக்கு லடாக்கில் படை விலக்கல் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை; மத்திய அரசு தகவல்

கிழக்கு லடாக்கில் படை விலக்கல் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை; மத்திய அரசு தகவல்
கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை விலக்கும் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை என இந்தியா கூறியுள்ளது.
புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவியதால் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்க முடிவு செய்தன.

அதன்படி கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கிழக்கு லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை திரும்ப பெற்று வருகின்றன. இதில் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கி உள்ளன.

இந்த நிலையில் கிழக்கு லடாக்கின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை முழுமையாக விலக்கி விட்டதாக சீனா கடந்த 28-ந்தேதி அறிவித்தது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி இருப்பதாகவும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை கூறியது.

ஆனால் அங்கு படை விலக்கல் நடவடிக்கை முற்றுப்பெறவில்லை என இந்தியா நேற்று மறுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கும் நடவடிக்கைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் படை விலக்கல் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை’ என்று தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில் முழுமையாக படை விலக்குவது குறித்து இருநாட்டு மூத்த கமாண்டர்கள் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என தெரிவித்த அனுராக் ஸ்ரீவஸ்தவா, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பதே இருதரப்பு உறவின் அடிப்படை என்றும் கூறினார்.

எனவே எல்லை நடவடிக்கைக்கான சிறப்பு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி கிழக்கு லடாக்கில் முழுமையான படை விலக்கல் மற்றும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை கொண்டு வருவதில் நம்முடன் சீனா உண்மையாக உழைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.