மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 35 என்ஜினீயர்களுக்கு கொரோனா; தலைமை என்ஜினீயரும் தப்பவில்லை + "||" + Corona for 35 engineers in Chennai Corporation; The chief engineer did not escape

சென்னை மாநகராட்சியில் 35 என்ஜினீயர்களுக்கு கொரோனா; தலைமை என்ஜினீயரும் தப்பவில்லை

சென்னை மாநகராட்சியில் 35 என்ஜினீயர்களுக்கு கொரோனா; தலைமை என்ஜினீயரும் தப்பவில்லை
சென்னை மாநகராட்சியில் நோய்த் தொற்று ஒழிப்பு பணியில் ஈடுபட்ட தலைமை என்ஜினீயர் உள்பட 35 என்ஜினீயர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை,

அரசு என்னதான் தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,881 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,013 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 99 ஆயிரத்து 794 ஆக அதிகரித்தது.

மேலும் நேற்று கொரோனாவுக்கு சென்னையைச் சேர்ந்த 21 பேர் உள்பட 97 பேர் பலி ஆனார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் 2,113 ஆகவும், தமிழ்நாட்டில் 3,935 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

சென்னையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நகரில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும், மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை நடத்தி வருகிறார்கள். நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

கெரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளை தனிமைப்படுத்தி நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கிறார்கள். கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலும் மற்றும் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி என்ஜினீயர்கள், இளநிலை என்ஜினீயர்கள் என சுமார் 700 என்ஜினீயர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் தவிர ஏராளமான ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்கள் மண்டல வாரியாக கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

என்னதான் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தாலும், முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

ஏற்கனவே 150 மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் 350 சுகாதார பணியாளர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். வருவாய்துறை, மக்கள் தொடர்புத் துறையின் உயர் அதிகாரிகளும் நோய்த் தொற்றுக்கு ஆளானார்கள். அவர்களில் சுமார் 300 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், மாநகராட்சியில் என்ஜினீயர்களாக பணியாற்றும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களில் தலைமை என்ஜினீயர் நந்தகுமாரும் ஒருவர் ஆவார். அவரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற என்ஜினீயர்கள் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஊழியர்கள் மற்றும் என்ஜினீயர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நோய்த் தொற்றுக்கு ஆளான போதிலும், கொரோனா ஒழிப்பு பணியை மாநகராட்சி தொய்வின்றி மேற்கொண்டு வருகிறது.