மாநில செய்திகள்

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவம்; தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன் + "||" + Thiruporur shooting incident; DMK Conditional bail for MLA

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவம்; தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன்

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவம்; தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன்
திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இமயம்குமார், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினர் இடையே நிலத்துக்கு பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டில் கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார். 

இந்த வழக்கில் ஏற்கனவே எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 13 பேரும், இமயம்குமார் தரப்பை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இமயம் குமார் தரப்பை சேர்ந்த சிவகுமார் (வயது 39), ஆறுமுகம் (42), தேவராஜ் (24), மோகன் (24), பிரேம்குமார் (31) ஆகிய மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த சீனிவாசனுக்கு ஆதரவாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனை கண்டித்தும் திருப்போரூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஊரடங்கு நேரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினர் 48 பேர் மீது திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதேபோன்று அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடையாக தரவேண்டும் என்றும் தெரிவித்தது.  இந்த வழக்கில் மேலும் 10 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.  கைதான 11 பேரும் தலா 10,000 ரூபாயை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்து உள்ளது.