தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் அதிக பயணிகளை கையாண்டதில் பெங்களூரு விமான நிலையத்துக்கு 2-வது இடம் + "||" + Bangalore Airport ranks 2nd in handling the highest number of passengers during the Corona period

கொரோனா காலத்தில் அதிக பயணிகளை கையாண்டதில் பெங்களூரு விமான நிலையத்துக்கு 2-வது இடம்

கொரோனா காலத்தில் அதிக பயணிகளை கையாண்டதில் பெங்களூரு விமான நிலையத்துக்கு 2-வது இடம்
கொரோனா காலத்தில் அதிக பயணிகளை கையாண்டதில் மும்பையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு விமான நிலையத்திற்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது.
பெங்களூரு,

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை 21 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனால் பொது போக்குவரத்துகளான விமானம், ரெயில், பஸ் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை வெளியிட்ட மத்திய அரசு உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் முதல் அனுமதி வழங்கி இருந்தது. ஆனாலும் முன்பு போல விமான பயணம் மேற்கொள்வதில் பயணிகள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் பெரும்பாலான விமானங்கள் குறைந்த அளவில் பயணிகளுடன் செல்கிறது. சில விமானங்களின் சேவை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

டெல்லிக்கு முதல் இடம்

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை கொரோனா காலத்தில் அதிக பயணிகளை கையாண்ட முக்கிய விமான நிலையங்கள் பற்றி இந்திய விமான போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு 12 லட்சத்து 31 ஆயிரத்து 338 பயணிகள் வந்து, சென்று உள்ளனர். கடந்த ஆண்டு(2019) ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் டெல்லி விமான நிலையத்திற்கு 1 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரத்து 909 பேர் வந்து சென்று உள்ளனர்.

இதுபோல பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 704 பேர் வந்து, சென்று உள்ளனர். இதில் கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 19 ஆயிரத்து 427 பேரும் அடங்குவர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் 84 லட்சத்து 11 ஆயிரத்து 268 பேர் வந்து, சென்று இருந்தனர். பெங்களூரு விமான நிலையத்திற்கு கடந்த ஜூன் மாதம் மட்டும் 180 விமானங்கள் வந்து, சென்று உள்ளன.

சென்னை விமான நிலையம்

இதுபோல கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 லட்சத்து 96 ஆயிரத்து 668 பேர் வந்து, சென்று உள்ளனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 54 லட்சத்து 31 ஆயிரத்து 724 பேர் வந்து, சென்றனர். மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 412 பேர் வந்து சென்று உள்ளனர். கடந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் 1 கோடியே 11 லட்சத்து 32 ஆயிரத்து 082 பேர் வந்து சென்று உள்ளனர்.

சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 1 லட்சத்து 90 ஆயிரத்து 47 பேர் வந்து சென்று உள்ளனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 55 லட்சத்து 60 ஆயிரத்து 851 பேர் வந்து சென்று உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அதாவது கொரோனா காலத்தில் அதிக பயணிகளை கையாண்டதில் மும்பையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு விமான நிலையம் 2-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா காலத்தில் முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா காலத்தில் முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.