தேசிய செய்திகள்

சினிமா படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு + "||" + Central Government Permission for Cinema Shooting - Release of Guidelines

சினிமா படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சினிமா படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சினிமா படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. என்றாலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருந்தது.


இந்த நிலையில், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.

இந்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் தெரிவித்தார். படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டார்.

கொரோனாவால் திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டும், அந்த துறையில் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும் சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கி இருப்பதாகவும், உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.

அந்த வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-

* படப்பிடிப்பின் போது கேமரா முன்பு தோன்றி நடிக்கும் கலைஞர்களும், மற்றவர்களும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் மற்றவர்கள் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள், ஸ்டூடியோக்களில் ஒலிப்பதிவு, படத்தொகுப்பு நடைபெறும் இடங்கள் மற்றும் சாப்பிடும் இடங்களில் அமர்வது, வரிசையில் நிற்பது உள்ளிட்ட அனைத்து சமயங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* வயதான மற்றும் கர்ப்பிணி தொழிலாளர்கள், வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவர்கள் மக்களுடன் நேரடி தொடர்பு கொள்ளக்கூடிய பணிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

* முடிந்தவரை குறைந்த எண்ணிக்கையிலான கலைஞர்கள், தொழிலாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்துவது நல்லது.

* படப்பிடிப்பு தளங்களிலும், வெளிப்புற படப்பிடிப்புகளிலும் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது. இதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம் ஆகும்.

* ஸ்டூடியோக்களில் பல்வேறு தளங்களில் படப்பிடிப்பு நடைபெறும் பட்சத்தில், கூட்டம் கூடாமல் இருக்க ஒரே சமயத்தில் படப்பிடிப்பை தொடங்குவதையும், முடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் தனித்தனி வழியாக உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள், ஒப்பனை, படத்தொகுப்பு அறைகள், உணவு அருந்தும் இடங்களில் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். படப்பிடிப்பு தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சுத்தம் செய்ய வேண்டும்.

* கையுறைகள், பாதுகாப்பு கவச உடைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். பொதுவான உபகரணங்களை பயன்படுத்துவோர் கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.

* ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் பாதுகாப்பு கவச உடைகளை பயன்படுத்த வேண்டும்.

* உள்ளூரில் உள்ள சூழ்நிலைகள், தேவைகளை பொறுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.