மாநில செய்திகள்

பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி ஜி.டி.பி. மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன் பெற அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் + "||" + Edappadi Palanisamy's letter to the Prime Minister to ensure that the percentage is allowed to borrow

பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி ஜி.டி.பி. மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன் பெற அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி ஜி.டி.பி. மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன் பெற அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன் பெற அனுமதிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்துவதை தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஜி.எஸ்.டி. வசூலிப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடுசெய்வதாக மத்திய அரசு அளித்திருந்த உறுதிமொழியைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை ஜி.எஸ்.டி. வரி விகித சட்டத்தில் 101-வது திருத்தச் சட்டப் பிரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதுவரையில் வருவாய் வரவுகளில் ஏற்பட்ட இழப்பீடுகளை தமிழகத்துக்கு வழங்கவில்லை. அன்று முதல் இதுவரை தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.12 ஆயிரத்து 250 கோடியாகும். அதில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் காலாண்டில் மட்டும் ரூ.11 ஆயிரத்து 459.37 கோடி வழங்கப்பட வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக, மாநில அரசுகளுக்கான வருவாய் வரவுகளில் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள சுகாதார வசதிகளை உருவாக்கியது, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்ற பணிகளுக்காக ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்கும் வகையில், வழக்கமான திட்டங்கள், நல உதவிகளுக்கு செலவிட வேண்டி உள்ளது. இதற்கு உடனடியாக நிதி ஆதாரங்கள் தேவையாக உள்ளன.

கடந்த நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் கூடுதலாக கடன் வாங்க மாநில அரசை அனுமதிக்க வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். மேலும், சிறப்பு நிதிகளாக மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளேன். மாநில அரசுகளின் வரி வருவாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவே இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு அடையாளம் காட்டியுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், 1.5 சதவீதம் அளவுக்கு கடன் பெற அனுமதி தரப்பட்டுள்ளது. கடன் பெறுதல் என்பது, ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கான பாக்கித் தொகையுடன் தேவையான அம்சமாக உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஏற்படும் இழப்பீடுகளை ஈடு செய்வது, மத்திய அரசின் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமை. இதுதான் மாநில அரசின் நிலைப்பாடாக தொடர்கிறது. மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்க உரிய நிதி ஆதார அம்சங்களுக்கு மத்திய அரசு வழி காண வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை கடந்த 27-ந் தேதி நடந்த கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்வைத்துள்ளார். இது நடைமுறை சாத்தியமுள்ள அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ள ஒரு யோசனையாகும்.

கடந்த 27-ந் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதில் முதல் வாய்ப்பாக, சந்தைகளில் கடன் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது மாநில நிர்வாக ரீதியாக கடினமானதுடன், மிகவும் செலவு வைக்கக்கூடிய அம்சமாகும். எனவே, ஜி.எஸ்.டி., வரிக்கான இழப்பீட்டுத் தொகைகளை முன் தொகையாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். கடன் பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் அது இழப்பீட்டுத் தொகைக்கான நிலுவையின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும்.

2-வது வாய்ப்பாக, ரூ.2.35 லட்சம் கோடியை கடன் தொகையாக மாநிலங்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்கனவே மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் வரை கடன் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த 2-வது வாய்ப்பும் மாநில அரசுகளின் நிலைகளைக் கவனத்தில் கொண்டு செய்யப்படவில்லை.

மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் மாநிலங்களுக்குரிய பிற ஒட்டுமொத்த ஆதாரங்களைக் குறைப்பதாக அமைந்திருக்கிறது. இது, கொரோனா தொற்று மற்றும் பல பணிகளுக்காக செலவிட்டு வரும் மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. நிதிச் சிக்கல்களால் உள்கட்டமைப்புகளுக்கான மூலதன செலவுகள் மற்றும் நலத் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, நிதியமைச்சகம் முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகள் குறித்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும். அதன்படி, ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகைக்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பாக்கித் தொகையை வழங்கும் முறையை ஏற்கிறோம். இதனால், இந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க முடியும்.

இந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி.க்கான முழு இழப்பீட்டுத் தொகை வழங்குவதையும், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன்பெற அனுமதிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். 2022 மார்ச் 31-ந் தேதிக்கு பின்பு வந்த இழப்பீட்டுத் தொகைகள், எந்த பாக்கியும் இல்லாமல் வழங்கப்படும் என்ற முறையான உறுதிமொழியை அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.