மாநில செய்திகள்

சசிகலா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை + "||" + The Income Tax Department has posted a notice regarding the freezing of Sasikala assets

சசிகலா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

சசிகலா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை
சென்னை போயச் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துக்களை முடக்கியதற்கான நோட்டீஸை வருமான வரித்துறையினர் ஒட்டினர்.
புதுடெல்லி,

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நான்குபேரையும் விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அதில், தனிக்கோர்ட்டு நீதிபதி குன்ஹா விதித்த தீர்ப்பினை அவர்கள் உறுதி செய்தனர்.  இதனால், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.  அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தியது.  இதில் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரி துறையால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரே இருந்த 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தம் என கூறப்பட்டது.  இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்தநிலையில் அண்மையில்  சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பினாமி தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் சசிகலா வாங்கிய சொத்துக்களை முடக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது வருமான வரித்துறை.

இந்நிலையில்  சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில், சொத்துக்களை முடக்கியதற்கான நோட்டிஸை வருமான வரித்துறையினர் ஒட்டி உள்ளனர். முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸை ஒட்டினர். சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

2003 முதல் 2005 வரை பினாமி பெயர்களில் சசிகலா வாங்கிய ரூ.300 கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.