தேசிய செய்திகள்

சுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கிறது, பாகிஸ்தான்; காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. பேட்டி + "||" + Sends terrorists to dig tunnels, Pakistan; Kashmir Police DGP

சுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கிறது, பாகிஸ்தான்; காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. பேட்டி

சுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கிறது, பாகிஸ்தான்; காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. பேட்டி
சுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பி வைக்கிறது. ஆயுதங்களை ‘டிரோன்’ மூலம் போடுகிறது என்று காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்தார்.
ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கலார் கிராமத்தில் சர்வதேச எல்லையில் நிலத்துக்கு அடியில் கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு சுரங்கத்தை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது.

170 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் ஆழம் 20 முதல் 25 அடிவரை இருந்தது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து தொடங்கி, இந்திய பகுதிவரை சுரங்கம் காணப்பட்டது. அதன் வழியாக, பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. தில்பக் சிங் நேற்று அந்த சுரங்கத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர், சம்பா மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்த சுரங்கப்பாதை, கடந்த 2013-2014 ஆண்டில், சான்யாரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய சுரங்கப்பாதை போலவே இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் நக்ரோடா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணையில், ஒரு சுரங்கம் வழியாக பயங்கரவாதிகள் வந்ததாக தெரிய வந்தது.

அது எங்கே இருக்கிறது என்று தேடி வந்தபோது, இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்தை பயன்படுத்தி, பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பி வந்துள்ளது. பயங்கரவாதிகளை அனுப்பி வைக்க சுரங்கம் தோண்டுவது, பாகிஸ்தான் சதித்திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும்.

இதுபோல், வேறு எங்காவது சுரங்கம் உள்ளதா என்று தேடி வருகிறோம். வேறு சுரங்கங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

சமீபத்தில், காஷ்மீர் நோக்கி சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் அதிநவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. வாகனத்தில் வந்த ஜெய்ஷ் இ முகமது ஆதரவாளர்கள் 2 பேர், சம்பாவில் இருந்து அந்த ஆயுதங்களை எடுத்து வருவதாகவும், பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

அந்த ஆயுதங்களை ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் பாகிஸ்தான் போட்டதாக தெரிகிறது.

பாகிஸ்தானின் இத்தகைய சதித்திட்டங்களை முறியடிக்க எல்லையிலும், உட்பகுதியிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.