தேசிய செய்திகள்

விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு: தமிழகத்தில் ரூ.47 கோடி மீட்பு + "||" + Farmers' financial assistance scheme abuse: Rs 47 crore recovery in Tamil Nadu

விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு: தமிழகத்தில் ரூ.47 கோடி மீட்பு

விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு:  தமிழகத்தில் ரூ.47 கோடி மீட்பு
விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில், தமிழகத்தில் இதுவரை ரூ.47 கோடி மீட்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவுக்காக எம்.பி.க்கள் சம்பளத்தை ஓராண்டு காலத்துக்கு 30 சதவீதம் குறைக்க மத்திய அரசு கடந்த ஏப்ரல் 7-ந் தேதி அவசர சட்டம் கொண்டு வந்தது.

அதற்கு மாற்றாக, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அம்மசோதா, நேற்று நிறைவேற்றப்பட்டது.

நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான கொரோனா பாதிப்புகளும், 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் வரையிலான கொரோனா மரணங்களும் தவிர்க்கப்பட்டதாக மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:-

ஊரடங்கு காலத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த முடிந்தது. ஊரடங்கு தொடங்கியபோது இருந்ததை விட தற்போது தனிமை படுக்கைகள் எண்ணிக்கை 22 மடங்கும், பிரத்யேக தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் எண்ணிக்கை 14 மடங்கும் அதிகரித்துள்ளது.

ஆய்வுக்கூடங்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள், முக கவசம், வென்டிலேட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தி தன்னிறைவை அடைந்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2016-17 முதல் 2018-19 நிதியாண்டு வரை, பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள், மொத்தம் ரூ.58 ஆயிரம் கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு இதுவரை 100 துணை ராணுவப்படையினர் பலியாகி இருப்பதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார். கொரோனாவுக்கு பலியான மாநில போலீசார் பற்றிய தகவல்கள், மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.38 ஆயிரத்து 282 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் மக்களவையில் கூறினார்.

மீதி தவணைத்தொகைகளை முன்கூட்டியே கொடுக்கும் திட்டமோ, நிதியை உயர்த்தும் திட்டமோ இல்லை என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.47 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார். தகுதியான பயனாளிகளை அடையாளம் காண்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

விமானத்தில் ஆயுதம் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை கொண்டு செல்லுதல், விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குள் கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு விமானங்கள் சட்டத்தின்படி, அதிகபட்சம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இந்த அதிகபட்ச அபராதத்தை ரூ.1 கோடியாக உயர்த்துவதற்கான மசோதா, ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதை மாநிலங்களவையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி நேற்று தாக்கல் செய்தார். அங்கு குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதி தேவைக்காக, எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், நேற்று மக்களவையில் எம்.பி.க்கள் சம்பள குறைப்பு மசோதா மீது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்குமாறு வலியுறுத்தினர்.

அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்தல், வர்த்தகம், வினியோகித்தல், இருப்பு வைத்தல் ஆகியவற்றை மத்திய அரசு ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேறியது.

அதன் மீதான விவாதத்துக்கு பதில் அளித்த மத்திய உணவுத்துறை இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே, “இம்மசோதாவால் விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். நுகர்வோர்களும் பலன் அடைவார்கள்” என்று கூறினார்.