மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல் + "||" + Covid 19 under control in TN say CM EPS

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை, 

சட்டசபையில் நேற்று கொரோனா தொற்று தொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், “நான் கடந்த மார்ச் மாதமே சொன்னேன். கொரோனாவால் ஒரு சாவு கூட வராது என்றீர்கள். இப்போது எவ்வளவோ பேர் இறந்துவிட்டனர்” என்றார். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிற நோய் தொற்றாகும். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் வந்தது அல்ல. இந்த நோய் தொற்று வருவதற்கு முன்பு என்னென்ன எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அனைத்து முன்னெச்சரிக்கையையும் எடுத்த காரணத்தால் நோய் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது. இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுதான் நடைமுறை.

ஒரு உயிரைக்கூட இழக்கக்கூடாது என்பது அரசினுடைய நிலைபாடு. அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், இதற்கு முழுமையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். எல்லோரும் நோய்வாய்ப்பட்டு தான் வந்திருக்கிறோம். எல்லோருக்கும் ஏதோ ஒரு நோய் இருக்கத்தான் செய்கிறது. 

அவ்வப்போது வருகிறது, அதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுப்போம், பூரண குணமாகி விடுவோம். ஆனால், இந்த நோய்க்கு இன்னும் மருந்தே கிடையாது. அப்படியிருக்கின்ற நிலையில் கூட, அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, மருத்துவ நிபுணர்கள் சொன்ன ஆலோசனைகளின்படி, அரசு எடுத்த நடவடிக்கைகளால் இன்று தமிழகத்தில் நோய் பரவல் குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த நோய் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், நோய் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது. அது அரசு எடுத்த நடவடிக்கைகளால் தான்.

ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, நம் அனைவருடைய விருப்பமும் ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கூட இந்த நோய் தொற்றால் இறந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன் ஒரு பேட்டி கொடுக்கின்றார். அந்த பேட்டியில், ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், எனக்குக்கூட நோய்கள் இருக்கின்றது, என்னுடைய மருத்துவர், நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுரை அளித்துள்ளார். 

இருந்தாலும், நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினாலே பணி செய்ய வேண்டுமென்பதால், ஒரு மணி நேரம் தான் வெளியே செல்கின்றேன். அப்பொழுதுகூட, பாதுகாப்பாக இருக்கிறேன் என்று தெளிவுபட கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் கூட, இந்த நோய் தொற்றால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார் என்று சொன்னால், இந்த நோயினுடைய வீரியம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை எதிர்க்கட்சி துணைத் தலைவர் அறிய வேண்டும். அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை, இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு எந்த அளவிற்கு பாடுபட்டு கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


அனைவருக்கும் உயிர் முக்கியம். வாழவேண்டுமென்று தான் அனைவரும் பிறந்தோம். அதற்கு வேறுபாடே கிடையாது. எனவே, உயிரைக் காப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் அனைவருக்கும் தெரிவிக்கிறோம். உறுப்பினர் அபுபக்கர் கூட, போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொன்னார். எல்லா தொலைக்காட்சிகளிலும் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு கொண்டு வருகிறோம். நடிகர்களை வைத்து மக்களுக்கு எளிதாக புரியக்கூடிய வகையில், இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, இந்த நோய்ப் பரவலை எவ்வாறு தடுக்க முடியும் என்ற விவரங்களை அன்றாடம் ஊடகத்தின் மூலமாக தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்.

அது மட்டுமல்ல, உள்ளாட்சித் துறை, காவல் துறை இணைந்து எல்லாப் பகுதியிலும் ஒலிபெருக்கியின் மூலமாக இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா வீடுகளிலும் சுமார் 2 லட்சம் விளம்பரத்தாள் அடித்து, அந்த விளம்பரத் தாளில் என்னென்ன நோய் பரவுகிறது, நீரிழிவு நோய் என்றால் எப்படி, புற்றுநோய் என்றால் எப்படி போன்றவற்றை அச்சிட்டு, மருத்துவ நிபுணர்கள் மூலம் அறியப்பட்டு, இந்த நோய்க்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் வந்தால், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம்.

ஆகவே, அரசைப் பொறுத்தவரை, ஒரு உயிரைக் கூட இழக்கக்கூடாது என்பதற்காக முழுமையான விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது.
3. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 12 லட்சம் கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்ந்துள்ளது.