விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 24-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், முதல்நிலை பரிசோதனைக்கு பின்னர் கூடிய விரைவில் வீடு திரும்புவார் என்றும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முதல்நிலை பரிசோதனைக்கு பின்னர் அவர் கூடிய விரைவில் வீடு திரும்புவார். அவர் தற்போது எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் நலமுடன் உள்ளார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் தற்போது அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது.