மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிப்பு?அ.தி.மு.க.வில் சுமுக முடிவை எட்ட இருதரப்பு தலைவர்களும் கடும் முயற்சி + "||" + CM Candidate Announcement Today? Leaders of both parties are working hard to reach a smooth end in the AIADMK

முதல்-அமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிப்பு?அ.தி.மு.க.வில் சுமுக முடிவை எட்ட இருதரப்பு தலைவர்களும் கடும் முயற்சி

முதல்-அமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிப்பு?அ.தி.மு.க.வில் சுமுக முடிவை எட்ட இருதரப்பு தலைவர்களும் கடும் முயற்சி
முதல்-அமைச்சர் வேட்பாளர் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில், அ.தி.மு.க.வில் சுமுக முடிவை எட்ட இருதரப்பு தலைவர்களும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொறுத்தவரை, சமீபத்தில் உயர்நிலை குழு கூட்டமும், செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.

செயற்குழு கூட்டத்தில், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இன்று (புதன்கிழமை) அறிவிப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம், ஓ.பன்னீர்செல்வம் விருப்பப்படி, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, தேனி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சென்றார்கள். அதேபோல், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்றனர். அவர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், காலை 11.10 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லி அனுப்பியதை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினார்கள். மேலும், வழிகாட்டு குழுவில் யார் - யாரை அமர்த்தலாம் என்றும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டம் மதியம் 1.40 மணி வரை சுமார் 2½ மணி நேரம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, இங்கு பேசப்பட்ட விஷயங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதற்காக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் புறப்பட்டு சென்றனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ½ மணி நேரம் அவர்கள் பேசினார்கள்.

அப்போது, அவர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “முதலில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க நான் சம்மதிக்கவில்லை. ஆனால், நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்) தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், விடுத்த வேண்டுகோளின் படியும் நான் அதை ஏற்றுக்கொண்டேன். ஏற்கனவே முடிவு செய்தபடி, முதல்-அமைச்சர் வேட்பாளரையும், வழிகாட்டு குழுவையும் ஒரே நேரத்தில் நாளை (அதாவது இன்று) அறிவித்துவிடலாம். வழிகாட்டு குழுவில் யார் - யார் உறுப்பினர்கள் என்பதைக் கூட அறிவித்துவிடலாம். நாம் செயற்குழு கூட்டம் நடந்த அன்று முடிவு செய்தபடி முதல்- அமைச்சர் வேட்பாளரையும், இப்போது நீங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டபடி வழிகாட்டு குழுவையும் அறிவித்து விட்டு, அதன்பிறகு மற்ற விஷயங்கள் குறித்து கலந்து பேசலாம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தை அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். அதாவது, “நாளையே (அதாவது இன்று) அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நாம் அனைவரும் ஒன்றாக கூடி முதலில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைப்போம். அப்போதே அந்த குழு உடனடியாக கூடி, முதல்- அமைச்சர் வேட்பாளரை பரிந்துரை செய்யட்டும். அதை ஏற்று, முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நானே அறிவிக்கிறேன். இந்த முறைப்படி அறிவிக்கவில்லை என்றால், முதல்-அமைச்சர் வேட்பாளரை யார் தேர்வு செய்தது என்ற எண்ணம் கட்சி தொண்டர்கள் மனதில் எழக்கூடும். வழிகாட்டு குழுவின் பரிந்துரைக்கு பிறகு நான் அறிவித்தால்தான் நன்றாக இருக்கும். மேலும், புதிதாக அமைக்கப்படும் வழிகாட்டு குழு அதிகாரம் படைத்ததாக இருக்க வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாக கூறினார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், இறுதி முடிவுஎதுவும் எட்டப்படவில்லை. நேற்று மாலை மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மீண்டும் இருதரப்பு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள்.

அ.தி.மு.க. வழிகாட்டு குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 6 உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.