தேசிய செய்திகள்

58 சதவீத பெண்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை; கருத்துக்கணிப்பில் திடுக்கிடும் தகவல் + "||" + Online sexual harassment of 58 percent of women; Startling information in the poll

58 சதவீத பெண்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை; கருத்துக்கணிப்பில் திடுக்கிடும் தகவல்

58 சதவீத பெண்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை; கருத்துக்கணிப்பில் திடுக்கிடும் தகவல்
58 சதவீத பெண்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை ஏற்படுகிறது என கருத்துக்கணிப்பில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
புதுடெல்லி,

பெண் என பூமியில் பிறந்துவிட்டால் பிறப்பு முதல் இறப்பு வரையில் வாழ்வே போராட்ட களமாகத்தான் ஆகிவிடுகிறது.

அதுவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை வார்த்தைகளால் வடித்து சொல்லிவிட முடியாது.

இன்றைய நவீன உலகில் பெண்கள் ஆன்லைனில் சமூக ஊடகங்கள் வழியாகவும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதை அடையாளம் காட்டி இருக்கிறது, இந்தியா, பிரேசில், ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 22 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு.

இந்த கருத்துக்கணிப்பு, உலக பெண்கள் நிலை அறிக்கை என்ற பெயரில், 15-25 வயதுடைய 14 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டிருக்கிறது.

வரும் 11-ந்தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்க உள்ள நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மனிதநேய அமைப்பான பிளான் இன்டர்நேஷனல் நடத்தியுள்ள இந்த கருத்துக்கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* ஆன்லைனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்-அப், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக தாங்கள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக 58 சதவீத பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

* ஐரோப்பாவில் 63 சதவீதம், லத்தீன் அமெரிக்காவில் 60 சதவீதம், ஆசிய பசிபிக் நாடுகளில் 58 சதவீதம், ஆப்பிரிக்காவில் 54 சதவீதம், வட அமெரிக்காவில் 52 சதவீதம் பெண்கள் ஆன்லைனில் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்கிறார்கள்.

* பாலியல் தொல்லைக்கு ஆளாகிற பெண் பிள்ளைகளில் 47 சதவீதத்தினர் உடல் அல்லது பாலியல் வன்முறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். 59 சதவீதத்தினர் தவறான மற்றும் அவமானத்தை ஏற்படுத்துகிற வசைமொழியை சந்தித்துள்ளனர்.

* 42 சதவீதத்தினர் தங்களை எல்.ஜி.பி.டி.கியு. என அழைக்கப்படுகிற பிரிவினர் (ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கைகள் உள்ளிட்டோர்) என ஒப்புக்கொள்கின்றனர். 14 சதவீதத்தினர் மாற்றுத்திறனாளிகள், 37 சதவீதத்தினர் இன சிறுபான்மையினர் என கூறுகின்றனர்.

* 11 சதவீதத்தினர் தங்கள் தற்போதைய அல்லது முன்னாள் காதலர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். 21 சதவீதத்தினர் நண்பர்களாலும், 23 சதவீதத்தினர் பள்ளிகள் அல்லது பணியிடங்களிலும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் கூறி உள்ளனர். 32 சதவீதத்தினர் அன்னியர்களாலும் தொல்லைகளை சந்திக்கின்றனர்.

* ஆன்லைன் பாலியல் தொல்லைக்கு பின்னர், 5-ல் ஒரு பெண் சமூக ஊடகங்களில் இருந்து விலகுகின்றனர் அல்லது பயன்பாட்டை குறைக்கின்றனர்.  இவ்வாறு அந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்
டிக்-டாக் மூலம் அறிமுகமான 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
2. இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை:தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு
சூப்பர் மார்க்கெட்டில் இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.