தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவத்தில் புதிய திருப்பம்; இளம்பெண்ணின் குடும்பத்தினரே கொன்றனர் என போலீசுக்கு கடிதம் + "||" + New twist on the Hadras incident; Letter to the police that the girl's family was killed

ஹத்ராஸ் சம்பவத்தில் புதிய திருப்பம்; இளம்பெண்ணின் குடும்பத்தினரே கொன்றனர் என போலீசுக்கு கடிதம்

ஹத்ராஸ் சம்பவத்தில் புதிய திருப்பம்; இளம்பெண்ணின் குடும்பத்தினரே கொன்றனர் என போலீசுக்கு கடிதம்
நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய ஹத்ராஸ் படுகொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினரே அவரை கொன்றனர் என கைதிகளில் ஒருவர் போலீசுக்கு எழுதிய கடிதம் புதிய திருப்பம் ஏற்படுத்தி உள்ளது.
ஹத்ராஸ்,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி உயர்சாதியை சேர்ந்த 4 வாலிபர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தின்போது வாலிபர்கள் பயங்கரமாக தாக்கியதால் படுகாயமடைந்த அவர் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்து உள்ளார். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 4 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ள இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாநில அரசை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இளம்பெண்ணின் சகோதரர் கூறுகையில், இச்சம்பவத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதுதொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு, சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரில் ஒருவரை நன்கு தெரியும் என போலீசார் கூறியிருந்தனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் சந்தீப் தாகூர் என்பவரும் ஒருவர்.  இந்நிலையில், அலிகார் சிறையில் உள்ள அவர் ஹத்ராஸ் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அதில், சந்தீப் உள்பட 4 பேரும் பெருவிரல் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.

அந்த கடிதத்தில், நானும், அந்த இளம்பெண்ணும் நண்பர்கள் என சந்தீப் தெரிவித்து உள்ளார்.  ஒருவரை ஒருவர் சந்திப்பதுடன் இல்லாமல் தொலைபேசி வழியேயும் அவர்கள் பேசி கொண்டு வந்துள்ளனர்.

சந்தீப் தனது கடிதத்தில், எங்களது நட்பு அவர்களது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.  சம்பவத்தன்று, வயலில் இருந்த பெண்ணை சந்திக்க சென்றேன்.  அங்கே அவரது தாயாரும், சகோதரர்களும் இருந்தனர்.  என்னை வீட்டுக்கு போகும்படி அந்த பெண் கேட்டு கொண்டதற்கேற்ப திரும்பி சென்றேன்.  பின்பு கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்க சென்றேன்.

அதன்பின்பே, எங்களது நட்பினால் ஆத்திரமடைந்த, பெண்ணின் தாயாரும், சகோதரர்களும் அவரை அடித்து, கடுமையாக காயப்படுத்தி உள்ளனர் என கிராமவாசிகள் கூறியதில் இருந்து தெரிய வந்தது.

அந்த பெண்ணை ஒருபோதும் நான் அடிக்கவில்லை.  அவரிடம் தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை.  என் மீதும், மற்ற 3 பேர் மீதும் அந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர்கள் தவறாக பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.  நாங்கள் அனைவரும் ஒன்றுமறியாத அப்பாவிகள்.  நீங்கள் விசாரணை மேறகொண்டு, எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

சந்தீப்புடன், இளம்பெண்ணின் சகோதரர் தொடர்பில் இருந்துள்ளார் என்பது தொலைபேசி பதிவுகள் வழியே தெரிய வந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரிவித்து உள்ளனர்.  இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் வரையில் 104 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன.

அலிகார் சிறை மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர், ஹத்ராஸ் போலீசாருக்கு 4 பேரில் ஒருவரான சந்தீப் கடிதம் எழுதியது பற்றி உறுதிப்படுத்தி உள்ளார்.  சட்டப்படி இதனை நாங்கள் அனுப்பி உள்ளோம்.  இதுபற்றி விசாரணை முகமைகள் முடிவு செய்யும் என கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை