மாநில செய்திகள்

கர்நாடகாவில் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கோரி எடியூரப்பாவுக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் + "||" + TN CM letter to Eduyurappa seeking appointment of teachers in Tamil schools in Karnataka

கர்நாடகாவில் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கோரி எடியூரப்பாவுக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம்

கர்நாடகாவில் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கோரி எடியூரப்பாவுக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம்
கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கோரி எடியூரப்பாவுக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

கர்நாடகாவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல தமிழ் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் பல தமிழ் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் இயங்குவதாக கூறப்படுகிறது.  இதுபற்றி கர்நாடகாவில் உள்ள தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

அதன்படி, கர்நாடகாவில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பாவுக்கு, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  அதில், கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் மாணவர்களுக்கு தமிழ் வழியில் கல்வி கற்க கர்நாடக அரசு, பள்ளிகளை தொடங்கி நடத்தி வருகின்றது. இத்தகைய தனியார் பள்ளிகளுக்கான ஒப்புதல் மற்றும் மானியம் ஆகியவற்றையும் கர்நாடக அரசு வழங்கி வருகின்றது.

இந்நிலையில், கர்நாடகாவில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனவும், தமிழ்வழியில் கல்வி கற்பதற்கான புதிய தனியார் பள்ளிகளை தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கவில்லை எனவும், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கர்நாடக மாநில வளர்ச்சிக்காக தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். முக்கியமாக, கோலார் தங்கச்சுரங்கம், ஹட்டி தங்கச்சுரங்கம், சந்தூர் மாங்கனீஸ் சுரங்கம், சிக்மகளூரு, மங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள காபி எஸ்டேட்டுகளின் வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளனர். மேலும், கட்டிட தொழில்கள், விவசாயம் ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.  எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அந்த கடிதத்தில், சமீபத்தில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.  தமிழ் வழியில் படிக்க தனியார் பள்ளிகளை தொடங்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.  வேறு மொழிவழி பள்ளிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளை மீண்டும் தமிழ்வழி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.