நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அந்த 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டு அலிகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஹத்ராஸ்,
உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் 4 உயர்சாதி வாலிபர்களால் கற்பழித்து, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அந்த 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டு அலிகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் சிறையில் இருந்தவாறே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 4 பேர் சார்பில் முக்கிய குற்றவாளி சந்தீப் எழுதியுள்ள அந்த கடிதத்தில், கொல்லப்பட்ட இளம்பெண்ணும், தானும் நண்பர்கள் எனவும், இதனால் இளம்பெண்ணின் தாயும், சகோதரரும் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார்.
எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் நிரபராதி என்பதால், இது குறித்து விசாரித்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கடிதத்தை ஜெயில் சூப்பிரண்டு மூலம் அவர்கள் அனுப்பி உள்ளனர்.
இந்த கடிதம் கிடைத்ததை உறுதி செய்துள்ள போலீஸ் சூப்பிரண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.