இந்தியாவில் கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சையில் உள்ளனர்கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் சாதனை + "||" + In India, less than 10 lakh patients have been treated in the last 17 days
இந்தியாவில் கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சையில் உள்ளனர்கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் சாதனை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 68 லட்சத்தை கடந்தாலும் 10 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 68 லட்சத்தை கடந்தாலும் 10 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் இந்த சாதனையை எட்டியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவியதால் உலக நாடுகள் உஷாராயின. எனினும் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நாடுகளுக்கும் பரவிய கொரோனா, இன்று அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாத இறுதியில் கேரளாவில்தான் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன்பின் நாட்டின் பிற பகுதிகளிலும் தொற்று படிப்படியாக பரவியது. எனினும் கேரளாவில் இந்த தொற்றின் வேகம் குறைவாகவே இருந்தது. மாநில அரசின் கடுமையான நடவடிக்கைகளால் தொற்று பரவல் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் 5 ஆயிரத்துக்கு மேல் தினசரி பாதிப்பை கொண்டிருக்க, கேரளாவோ 1000, 2000 என்ற அளவிலேயே தினசரி நோயாளிகளை பெற்று வந்தது.
ஆனால் இவை எல்லாம் கடந்த மாத தொடக்கம் வரைதான். அப்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 2,500 நோயாளிகளை மட்டுமே பார்த்திருந்த கேரளா, கடந்த 3 வாரங்களாக சராசரியாக 7 ஆயிரம் புதிய தொற்றுகளை தினசரி கண்டுவருகிறது.
அதிலும் புதிய உச்சமாக நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரத்து 606 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகரிக்காமலேயே இவ்வளவு அதிக பாதிப்பை பெற்றது மாநில அரசுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதன் மூலம் ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளை பெற்ற 4-வது மாநிலம் என்ற மோசமான சாதனையை கேரளா படைத்தது. இதற்கு முன்பு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மட்டுமே ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கு அதிகமான பாதிப்புகளை பெற்றிருந்தன.
எனினும் நேற்று அங்கு கொரோனாவின் வேகம் சற்றே குறைந்தது. அங்கு நேற்று 5,445 பேர் மட்டுமே புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,56,850 ஆக உயர்ந்ததாகவும் சுகாதார மந்திரி சைலஜா தெரிவித்தார். அதேநேரம் நேற்று ஒரே நாளில் 7,003 பேர் குணமடைந்தனர். இதனால் மாநிலத்தில் தொற்றை வென்றவர்களின் எண்ணிக்கை 1,67,256 ஆக அதிகரித்தது.
மாநிலத்தில் தற்போது 90,579 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்றும் 24 பேர் மரணமடைந்தனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 930 ஆகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 63,146 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 78 ஆயிரத்து 524 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கியுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்து 35 ஆயிரத்து 655 ஆக அதிகரித்து விட்டது.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 971 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கையும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 526 ஆனது. எனினும் இந்தியாவின் கொரோனா மரண விகிதம் 1.54 ஆகவே இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 11 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 58 லட்சத்து 27 ஆயிரத்து 704 ஆக உயர்ந்தது. இது மொத்த பாதிப்பில் 85.25 சதவீதம் ஆகும்.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 9 லட்சத்து 2 ஆயிரத்து 425 பேர் மட்டுமே, அதாவது 13.20 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கு கீழேயே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய அம்சமாக நாட்டின் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட 11 லட்சத்து 94 ஆயிரத்து 321 பரிசோதனைகளையும் சேர்த்து, 8.34 கோடி பரிசோதனைகள் நடந்திருக்கின்றன.
அதிலும் தினசரி 10 லட்சம் பேருக்கு 140 பரிசோதனை என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை இந்தியா ஏற்கனவே கடந்து, தற்போது 10 லட்சம் பேருக்கு 865 பரிசோதனை என்ற சராசரியை எட்டியுள்ளது. இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்படி 140 பரிசோதனை மைல்கல்லை ஏற்கனவே கடந்திருக்கின்றன.
இவ்வாறு பரிசோதனைகள் அதிகரித்தாலும், இந்தியாவின் தொற்று சாத்திய விகிதம் 8.19 சதவீதமாகவே உள்ளது. அதிலும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதைவிட குறைவான சராசரியை கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.