தேசிய செய்திகள்

டெல்லி ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தது மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மரணம் ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் + "||" + Death of Union Food Minister Ramvilas Baswan Condolences to the President, Prime Minister

டெல்லி ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தது மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மரணம் ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

டெல்லி ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தது மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மரணம் ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
டெல்லி ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

நாட்டின் மூத்த அரசியல் தலைவர் களில் ஒருவராக விளங்கியவர், ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74).

பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்தார்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கி, ஊரடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, உணவுப்பொருட்கள் வினியோகம் சீராக நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை திறம்பட எடுத்து பெயர் பெற்றார்.

இந்த நிலையில் அவர் உடல்நிலை திடீரென பாதித்தது. இதையடுத்து அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள போர்ட்டிஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவரது உடல்நிலையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. உடனே, பாட்னாவில் பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தவிருந்த அவரது மகனும், கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் டெல்லி விரைந்தார். அதைத் தொடர்ந்து 3-ந் தேதி இரவு அவருக்கு அவசரமாக இதய அறுவை சிகிச்சை நடந்தது.

அவரது உடல்நிலை குறித்து சிராக் பஸ்வானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் கேட்டறிந்தனர்.

இது குறித்து சிராக் பஸ்வான் குறிப்பிட்டபோது, “கடந்த பல நாட்களாக அப்பா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்கோளாறுகள் காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. தேவை ஏற்பட்டால், சில வாரங்களுக்கு பிறகு அவர் மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரலாம்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

பீகார் மாநில அரசியலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராம்விலாஸ் பஸ்வான் மறைவு, அங்கு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராம்விலாஸ் பஸ்வானின் மறைவை மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் அறிவித்தார். அதில் அவர், “அப்பா, இப்போது நீங்கள் இந்த உலகில் இல்லை. ஆனால் நீங்கள் எங்கிருந்தாலும், எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன்” என உருக்கமுடன் குறிப்பிட்டிருந்தார்.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவால், நாடு ஒரு தொலைநோக்கு தலைவரை இழந்து விட்டது. நாடாளுமன்றத்தில் மிக சுறுசுறுப்பாக நீண்ட காலம் பணியாற்றிய உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் நான் வார்த்தை வராத அளவு வேதனை அடைந்துள்ளேன். அவரது மறைவால் நமது நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அது ஒரு போதும் நிரப்பப்படாது. ராம் விலாஸ் பஸ்வானின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. நான் ஒரு நண்பரை இழந்து விட்டேன். அவர் மதிப்புமிக்க சகா. ஒவ்வொரு ஏழை மக்களும் கண்ணியமான வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்வதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கினார். அவரோடு சேர்ந்து பணியாற்றியது, தோளோடு தோள் சேர்ந்து நின்றது நம்ப முடியாத அனுபவம் ஆகும். அவரது குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு மத்திய மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ராம்விலாஸ் பஸ்வான், பீகார் மாநிலத்தில், காகரியா மாவட்டத்தில் ஷாகர்பானி என்ற இடத்தில் ஜமுன் பஸ்வான், சியா தேவி தம்பதியரின் மகனாக 1946-ம் ஆண்டு, ஜூலை மாதம் 5-ந் தேதி பிறந்தார். எம்.ஏ., எல்.எல்.பி, பட்டங்களை பெற்றவர். 1969-ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டு பணிக் காக தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் அதில் சேராமல் அரசியல் களம் புகுந்தார்.

அதே ஆண்டில் பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஐக்கிய சோஷலிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சோசலிஷ தலைவர்களாக திகழ்ந்த ஜெயபிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண் போன்றவர்களை பின்பற்றினார். நெருக்கடி நிலையின்போது சிறை சென்றார். 1977-ல் ஜனதா கட்சி தொடங்கப்பட்டபோது அதில் ஐக்கியம் ஆனார். அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஹாஜிப்பூர் தொகுதியில் இருந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

பின்னர் ஜனதாதளத்தில் சேர்ந்த இவர், அதில் இருந்து வெளியேறி 2000-ம் ஆண்டில் லோக்ஜன சக்தி கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். மத்தியில் வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய், மன்மோகன்சிங் என பல பிரதமர்களின் மந்திரிசபையில் பல்வேறு துறைகளை கவனித்த அனுபவசாலியான அவர், தற்போது நரேந்திர மோடி மந்திரிசபையில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக விளங்கினார். மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தார்.

இவருக்கு மனைவி ரீனா சர்மாவும், சிராக் பஸ்வான் உள்பட 4 குழந்தைகளும் உள்ளனர்.