தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றது59 லட்சம் பேர் இதுவரை குணமடைந்தனர் + "||" + The number of corona patients receiving treatment across the country has dropped below 9 lakh

நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றது59 லட்சம் பேர் இதுவரை குணமடைந்தனர்

நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றது59 லட்சம் பேர் இதுவரை குணமடைந்தனர்
நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்குப்பின் முதல் முறையாக 9 லட்சத்துக்கு கீழே சென்றுள்ளது.
புதுடெல்லி,

உலகின் பல்வேறு நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தினமும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக பாதிப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.


அதேநேரம் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 3 வாரங்களாக புதிய பாதிப்பை விட புதிதாக குணமடைவோர் எண்ணிக்கையை இந்தியா தினமும் பெற்று வருகிறது. இதனால் உலக அளவில் அதிக குணமடைந்தோரை கொண்ட நாடாகவும் இந்தியா நீடிக்கிறது.

இந்த வரிசையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்திலும் 78 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை தொற்றை வென்றவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்து 6 ஆயிரத்து 69 ஆக அதிகரித்து உள்ளது. மொத்தத்தில் 85.52 சதவீதம் பேர் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில் வெறும் 8 லட்சத்து 93 ஆயிரத்து 592 பேர் மட்டுமே நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் வெறும் 12.94 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றிருப்பது ஒரு மாதத்துக்குப்பின் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த மாதம் 9-ந்தேதி, 8.97 லட்சம் நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். அதன்பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்று 10 லட்சத்தையும் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 70 ஆயிரத்து 496 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்து 6 ஆயிரத்து 151 ஆக அதிகரித்து இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க மேற்படி 24 மணி நேரத்தில் மேலும் 964 பேர் மரணத்தை தழுவி இருக்கின்றனர். இதனால் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கையும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 490 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் நாட்டின் கொரோனா இறப்பு விகிதம் 1.54 என்ற குறைந்த விகிதத்திலேயே தொடர்கிறது.

புதிய சாவு பட்டியலில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 37 சதவீதத்துக்கும் அதிகமான மரணங்கள் (358 பேர் சாவு) நிகழ்ந்திருக்கின்றன. இதைப்போல புதிதாக பாதிக்கப்பட்டவர்களிலும் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தொடர்ந்து கர்நாடக மாநிலம் 10 ஆயிரத்துக்கு அதிகமான புதிய பாதிப்புகளை பெற்றுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 78 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கார், டெல்லி ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதைப்போல புதிதாக குணமடைந்தவர்களிலும் 75 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதிலும் மராட்டியர்கள் மட்டுமே 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 11 லட்சத்து 68 ஆயிரத்து 705 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் நாட்டின் மொத்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 8 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 680 என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.


அதிகம் வாசிக்கப்பட்டவை