மாநில செய்திகள்

ஊராட்சி மன்றங்கள் அனுமதியில்லாத சாலை டெண்டர்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு + "||" + Panchayat councils cancel unauthorized road tenders

ஊராட்சி மன்றங்கள் அனுமதியில்லாத சாலை டெண்டர்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

ஊராட்சி மன்றங்கள் அனுமதியில்லாத சாலை டெண்டர்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஊராட்சி மன்றங்களில் அனுமதியில்லாமல் விடப்பட்ட சாலை டெண்டர்களை ரத்துசெய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் டெண்டர்களை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள மகத்தான தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.


அரசியல் சட்டம் தந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிராக செயல்பட நினைத்த அ.தி.மு.க. அரசுக்கு இந்த தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி. தொடர்ந்து நடத்திவரும் ஊழல் நிர்வாகத்தின் ஒருகட்டமாக, பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி, தனது கைப்பாவைகளாக மாவட்ட கலெக்டர்களை ஆக்கி, கொள்ளையடிக்க நினைத்த ஊழல் அரசின் தலையில் ஓங்கி வைக்கப்பட்டுள்ள சரியான குட்டு.

இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், “மாவட்ட அளவில் டெண்டர் விடும் அரசின் வழிகாட்டுதல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஓரங்கட்டுகிறது. இதை அனுமதித்தால் இந்த அமைப்புகள் ஏதோ அரசு செய்யும் வேலைகளை வேடிக்கை பார்க்கும் அமைப்புகளாக மாற்றப்பட்டு பஞ்சாயத்து ராஜ் நடைமுறையின் நோக்கத்திற்கு எதிராக அமையும். ஊராட்சி மன்றங்கள் டெண்டர்விட முடியாது என்று அரசும், அதிகாரிகளும் சத்தியப்பிரமாண வாக்குமூலமாகவே இந்த நீதிமன்றத்தில் தெரிவித்தது ஊராட்சி மன்றங்கள் தங்களுக்கு கீழ்ப்படிந்தவை என்ற அரசின் மனவோட்டத்தைக் காட்டுகிறது. இந்த எண்ணவோட்டத்தை அரசு கைவிட்டு ஊராட்சி மன்றங்களை அரசியல் சட்டப்படி சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வரிகள் பஞ்சாயத்து ராஜ் நடைமுறையை போற்றிப் பாதுகாக்கும் வரிகள்.

இவற்றைச் சுட்டிக்காட்டி, “ஊராட்சி மன்றங்களின் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் டெண்டர் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. இனி, ஊராட்சி மன்றங்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகளைக் கிராமசபையில் வைத்து முடிவு செய்து ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய நிதிக்குழுவின் நிதி பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும், “தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்கள்தான் 14-வது நிதிக்குழு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்றும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 14-வது நிதிக்குழு நிதியிலான சாலை மேம்பாட்டு பணிகளாக இருந்தாலும் சரி, ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணி நிதிகளாக இருந்தாலும் சரி, ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும் என்றும் ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர்களை வைத்து “இ-டெண்டர்” விடும் முறையை இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களுக்கு துணை போகும் நோக்கில், 14-வது மத்திய நிதிக்குழு வழிகாட்டுதலுக்கு எதிராக ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வழிகாட்டுதல் வழங்கிய ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அவற்றை சிரமேற்கொண்டு நிறைவேற்றி ஊழலுக்கு துணைபோகும் மாவட்ட கலெக்டர்கள் யாரும் சட்டத்தின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.