மாநில செய்திகள்

வங்கிகளுக்கான புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + Banks should issue new employee selection notice: MK Stalin insists

வங்கிகளுக்கான புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வங்கிகளுக்கான புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் விளைவிக்காத வகையில் வங்கிகளுக்கான புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்திற்கு, மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டினை சிதைத்தெடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் அராஜக, சட்டவிரோதப் போக்கிற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வில் இடஒதுக்கீடு என்னும் பெயரில் இப்படியொரு மோசடியை, வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியிருக்கிறது. சமூகநீதியை கிள்ளுக்கீரையை விடக் கீழானதாக நினைத்து பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்குத் தொடர்ந்து மத்திய அரசு கேடு விளைவித்து வருவதும், இடஒதுக்கீடு உரிமை படைத்த பெரும்பான்மை மக்களை எள்ளி நகையாடி வருவதும் மிகுந்த வேதனையளிக்கிறது.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இடஒதுக்கீட்டு கொள்கை மீது குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூகநீதி பறிக்கப்படுகிறது. இந்நாட்டின் முன்னேற்றத்தில் நிர்வாகத்தில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை ஓரங்கட்டப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்த பிறகும், அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேல்படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமல்ல அந்த இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை கூட இந்த ஆண்டு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாக வாதிட்டிருப்பது சத்திய பிரமாண வாக்குமூலமாகவே தாக்கல் செய்து எதிர்த்திருப்பது, மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான வஞ்சக மனப்பான்மையைக் காட்டுகிறது.

தற்போதையை வங்கி பணியாளர் தேர்வு நிறுவன இடஒதுக்கீடு மோசடியை பொறுத்தவரை, முதல் நிலைத் தேர்வு மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் முதன்மைத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு தலையிட்டு 49.5 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பிய்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் முதன் நிலை தேர்வை ரத்து செய்து புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு உள்ள 49.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் விளைவிக்காத வகையில் புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் பெரும்பான்மையான சமுதாயத்தின் சமூக நீதி உரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், சமூகநீதியின் மீது அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.