மாநில செய்திகள்

நடிகர் சூரியின் நில மோசடி புகார்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு + "||" + Chennai High Court has directed the Central Crime Branch Police to file a land fraud complaint against actor Suri

நடிகர் சூரியின் நில மோசடி புகார்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சூரியின் நில மோசடி புகார்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நில மோசடி புகார் தொடர்பாக சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி நடிகர் சூரி தொடர்ந்த வழக்கில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை

"வெண்ணிலா கபடிக்குழு" படம் மூலம் அறிமுகமானவர் சூரி. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷாலுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் சூரி. இதனால் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, சூரிக்கு அறிமுகமாகினார்.

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் "வீர தீர சூரன்" என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன. அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் ஒன்று விலைக்கு வருகிறது அதை வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். ரூ. 2.70 கோடி தரவில்லை. மீதி பணத்தை தருவதாக கூறி பல மாதங்களாக ரமேஷ் குட்வாலா, அன்புவேல் ராஜன் ஏமாற்றி வந்ததால் நடிகர் சூரி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாகியும் பணம்  தராததால் 2018-ம் ஆண்டு அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சூரி புகாரின் பேரில் எந்த வழக்கும்பதிவு செய்யப்படவில்லை.

இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். ரமேஷ் குடவாலா, திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி தொடர்ந்த வழக்கு இன்று (அக். 16) நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரமேஷ் குடவாலா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்குச் சாதகமாகச் செயல்படுவதாக சூரி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இருவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையைத் தள்ளி வைத்தார்.