மாநில செய்திகள்

சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மாநகராட்சி கமிஷனர் + "||" + Corona exposure will increase in November and December in Chennai- Corporation Commissioner

சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மாநகராட்சி கமிஷனர்
மெரினா கடற்கரையை திறப்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
சென்னை, 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபடும் 1,300 பணியாளர்களுக்கு, பெசன்ட் நகரில் மழைக்கோட்டினை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வழங்கினார். பின்னர் வீடுகள் தோறும் சென்று பணியாளர்கள் மூலம் திடக்கழிவுகள் தரம் பிரித்து சேகரிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் திடக்கழிவுகளை சேகரித்து, அதனை அகற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அந்த வகையில் முதற்கட்டமாக 7 மண்டலங்களில் “வீடு, வீடாக சென்று திடக்கழிவுகளை தரம் பிரித்து சேகரித்து அதனை பல்வேறு மையங்களுக்கு எடுத்து செல்லும் திட்டத்தை” தொடங்கி இருக்கிறோம்.

மேலும் கூடுதலாக 4 மண்டலங்களில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யும் தருவாயில் உள்ளது. வீடு, வீடாக சென்று திடக்கழிவுகளை தரம் பிரித்து சேகரித்து அதனை பல்வேறு மையங்களுக்கு எடுத்து செல்லும் திட்டத்தை மொத்தமாக சென்னை மாநகராட்சியில், 11 மண்டலங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் தொடங்கி இருக்கிறோம். இத்தகைய முறை சென்னையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கக் கூடிய செயலில் ஆரம்பித்து, முறையாக செயல்படுத்துவதன் மூலமாக, குப்பைகளை அறிவியல் பூர்வமாக கையாளுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமைய பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சென்னை மாநகராட்சியில் இன்னும் 4 மாதங்களுக்குள், குப்பைகளை 3 சக்கர சைக்கிள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் சேகரிக்கும் முறை முழுமையாக நிறுத்தப்பட்டு, பேட்டரி மற்றும் மோட்டார் மூலம் இயங்கும் தானியங்கி வண்டி மூலம் குப்பைகளை சேகரிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் வாயிலாக, திடக்கழிவு மேலாண்மையில் முக்கியமான காரணிகளின் அடிப்படையில் தான் ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்படும். இதன் மூலம் கட்டணம் வழங்கலில் தவறுகள் ஏற்படாது. மழை காலங்களில் ஏற்படும் நீர்தேக்கம் 2 அடிக்கு மேல் தேங்கும் அளவு பல இடங்களில் குறைந்துள்ளது. நீர்த்தேக்கம் காணப்படும் ஒரு சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பெரிய அளவிளான மோட்டார் வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சென்னை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடையாறு, கூவம் ஆறு, கொசஸ்தலை, கோவளம் என 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அடையாறு, கூவம் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்படாத வகையில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னையை பொறுத்தவரை கொசஸ்தலை ஆற்றில் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றில் பணிகள் முடிவடைவதற்கு 2 ஆண்டுகள் ஆகும். அதேபோல் தென் சென்னை பகுதியில் கோவளத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

அடுத்ததாக நீர் நிலைகள் புனரமைப்பு 210 நீர்நிலைகளில் பணிகள் நடந்து கொண்டு வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நிரம்பியது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை ஏற்படுவதால், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும். மேலும் இந்த மாதங்களில் மழை பொழிவும், குளிர் காலமும் அதிகம் இருப்பதால் தொற்று பரவல் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அனைவரின் கடமை.

கூட்டத்தை கட்டுப்படுத்த வருவாய் துறை, காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் இணைந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அரசின் வழிமுறைகளை பின்பற்றாததால் சென்னை மாநகராட்சியில் ரூ.3 கோடி வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அபராதம் வசூலிப்பது எங்களது எண்ணம் கிடையாது. பொது மக்கள் இதனை உணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

மெரினா கடற்கரையை திறப்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். தற்போதைக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 200 வார்டுகளிலும் தயார் நிலையில் உள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மெரினா கடற்கரையில் தடையை மீறி நுழைந்த பொதுமக்கள்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்
விடுமுறை தினமான நேற்று பொழுதை கழிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி பொதுமக்கள் நுழைந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.