கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் + "||" + Delhi Capitals won by 5 wkts

ஐபிஎல் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்:  பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்
ஷிகர் தவானின் அதிரடியான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சார்ஜா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி வீழ்ந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 34-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுகட்டியது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக பியுஷ் சாவ்லாவுக்கு பதிலாக கேதர் ஜாதவ் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி சாம் கர்ரனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக இறங்கினர். துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரிலேயே சாம் கர்ரன்(0) ஆட்டம் இழந்தார். அவர் தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே நோர்டியா அருமையாக கேட்ச் செய்தார்.

அடுத்து ஷேன் வாட்சன், பிளிஸ்சிஸ்சுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தடுமாற்றத்துடன் ஆடியதால் முதல் 4 ஓவர்களில் 15 ரன்களே எடுத்தனர். அதைத் தொடர்ந்து அதிவேக பவுலர் நோர்டியாவின் ஓவரில் பிளிஸ்சிஸ் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டினார். அதன் பிறகு ஸ்கோர் சற்று வேகமாக உயர்ந்தது. ஆனாலும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். சின்ன மைதானமான சார்ஜாவில் இந்த சீசனில் பவர்-பிளேயில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.

வாட்சன்-பிளிஸ்சிஸ் ஜோடி ஸ்கோர் 87 ரன்களை (11.4 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. வாட்சன் 36 ரன்களில் (28 பந்து, 6 பவுண்டரி) போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய அம்பத்தி ராயுடு தொடக்கம் முதலே மட்டையை சுழட்டுவதில் கவனம் செலுத்தினார். அஸ்வினின் சுழலில் சூப்பரான ஒரு சிக்சரை பறக்க விட்டார்.

மறுமுனையில் நடப்பு தொடரில் 4-வது அரைசதத்தை கடந்த பிளிஸ்சிஸ் 58 ரன்களில் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டோனி (3 ரன், 5 பந்து) ஏமாற்றினார். அவர் நோர்டியாவின் பந்துவீச்சை ஸ்டம்பை விட்டு கொஞ்சம் விலகி விளாச முயற்சித்த போது பந்து பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

இதன் பின்னர் அம்பத்தி ராயுடுவுடன், ரவீந்திர ஜடேஜா கைகோர்த்தார். கடைசி கட்டத்தில் இவர்களின் பேட்டிங் ஜாலத்தால் தான் ஆட்டமே விறுவிறுப்பு அடைந்தது. ரபடாவின் ஒரே ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் ஓடவிட்டனர். இதே போல் நோர்டியாவின் கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்சர்களை கிளப்பினார்.

20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. ஜடேஜா 33 ரன்களுடனும் (13 பந்து, 4 சிக்சர்), அம்பத்தி ராயுடு 45 ரன்களுடனும் (25 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் சென்னை பேட்ஸ்மேன்கள் 57 ரன்கள் சேகரித்தனர். டெல்லி தரப்பில் நோர்டியா 2 விக்கெட்டும், ரபடா, தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 180 ரன்கள் இலக்கை டெல்லி அணி ஆடியது. சென்னை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே பிரித்வி ஷாவை (0) வெளியேற்றி மெய்டனாக்கினார். அடுத்து வந்த ரஹானேவின் (8 ரன்) விக்கெட்டையும் அவரே காலி செய்தார். இதன் பிறகு ஷிகர் தவானும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அணியை நிமிர வைத்தனர். ஸ்கோர் 94 ரன்களை எட்டிய போது ஸ்ரேயாஸ் அய்யர் (23 ரன்) பெவிலியன் திரும்பினார்.

கேட்ச் கண்டங்களில் இருந்து தப்பித்த தவான் நாலாபுறமும் பந்துகளை ஓடவிட்டு ரன் குவித்தார். இதனால் டெல்லி அணி இலக்கை நோக்கி முன்னேறியது. இதற்கிடையே ஸ்டோனிஸ் 24 ரன்னில் கேட்ச் ஆனார். கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய சாம் கர்ரன், அலெக்ஸ் கேரியின் (4 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதோடு 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து நம்பிக்கையை தந்தார். இந்த ஓவரில் தவான் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தையும் நிறைவு செய்தார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அடிக்கப்பட்ட 3-வது சதமாகும்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. தவான், அக்‌ஷர் பட்டேல் களத்தில் நின்றனர். வெய்ன் பிராவோ பவுலிங் செய்ய வருவார் என்று எதிர்பார்த்த வேளையில் சென்னை கேப்டன் டோனி, சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை வீச அழைத்தார். ஜடேஜா வீசிய முதல் பந்து வைடாக சென்றது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் தவான் ஒரு ரன் எடுத்தார். 2-வது மற்றும் 3-வது பந்தில் சிக்சர் அடித்து அதிர்ச்சி அளித்த அக்‌ஷர் பட்டேல் 4-வது பந்தில் 2 ரன் எடுத்தார். இதன் பிறகு 5-வது பந்தை மீண்டும் சிக்சருக்கு அனுப்பி இலக்கை எட்ட வைத்தார்.

டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. தவான் 101 ரன்களுடனும்(58 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்), அக்‌ஷர் பட்டேல் 21 ரன்னுடனும் (5 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 9-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 7-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: வாழ்வா-சாவா போராட்டத்தில் சென்னை அணி
சென்னை அணியின் கேப்டன் டோனியின் மோசமான பேட்டிங்கே (9 ஆட்டத்தில் 136 ரன்) பின்னடைவுக்கு காரணமாக அமைகிறது.
2. சென்னை வீரர் பிராவோ மீண்டும் காயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ மீண்டும் காயம் அடைந்தார்.
3. டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது
4. ஐபிஎல் டி20 2020: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எத்ரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
5. தொடர் தோல்வி- அணுகுமுறையில் மாற்றம் தேவை: டோனி ஒப்புதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.