மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் என தகவல் + "||" + Universities approved to pass for Aryan students

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் என தகவல்

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் என தகவல்
சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதியாண்டு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்த சூழலில் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் அரியர் பாடத்திற்குக் கட்டணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று முதல்வர் பிறப்பித்த உத்தரவுக்கு அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கு அரியர் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிடிஇ கடிதம் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடிதம் வந்துள்ளதாக கூறப்பட்டது.

இது அரியர் தேர்வுக்காகக் கட்டணம் செலுத்தியிருந்த 7 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளனர். 

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறுகையில், அனைத்து இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அரியர் ரத்து தொடர்பாகக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை. அரசு எடுக்கும் முடிவுகளை 13 பல்கலைக்கழக வேந்தர்களில் சூரப்பா ஒருவர் மட்டுமே ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்.

யுஜிசி விதிமுறைகளின்படி தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டது என்றார்.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலை கழகங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.  அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  கலை அறிவியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியியல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் அண்ணா பல்கலை கழகம் மட்டும் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.