கிரிக்கெட்

ஒரே ஆட்டத்தில் 2 முறை ‘சூப்பர் ஓவர்- மும்பையை சாய்த்து பஞ்சாப் அசத்தல் வெற்றி + "||" + Shami, Rahul help KXIP win after second Super Over

ஒரே ஆட்டத்தில் 2 முறை ‘சூப்பர் ஓவர்- மும்பையை சாய்த்து பஞ்சாப் அசத்தல் வெற்றி

ஒரே ஆட்டத்தில் 2 முறை ‘சூப்பர் ஓவர்- மும்பையை சாய்த்து பஞ்சாப் அசத்தல் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்- மும்பை இடையிலான ஆட்டம் சமன் ஆனதால், முடிவை தீர்மானிக்க 2 முறை சூப்பர் ஓவர் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் பஞ்சாப் திரில் வெற்றியை பெற்றது.
துபாய், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 36-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா (9 ரன்), வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை அடித்த போது அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (0), இஷான் கிஷன் (7 ரன்) நடையை கட்ட மும்பை அணி திணறியது.

இதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் குயின்டான் டி காக்கும், குருணல் பாண்ட்யாவும் கூட்டணி போட்டு, பஞ்சாப்பின் பந்து வீச்சை சமாளித்து அணியை நிமிர வைத்தனர். ஸ்கோர் 96 ரன்களாக உயர்ந்த போது, குருணல் பாண்ட்யா (34 ரன், 30 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரவி பிஷ்னோயின் சுழலில் கேட்ச் ஆனார். மறுமுனையில் குயின்டான் டி காக் இந்த சீசனில் 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் தனது பங்குக்கு 53 ரன்கள் (43 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கிடையே ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னில் வெளியேறினார்.

இறுதிபகுதியில் பொல்லார்ட்டும், நாதன் கவுல்டர்-நிலேவும் இணைந்து பஞ்சாப்பின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரது ஓவர்களில் பொல்லார்ட் மொத்தம் 4 சிக்சர்களை தெறிக்க விட்டார். இதனால் மும்பையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது. பொல்லார்ட் 34 ரன்களுடனும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), கவுல்டர்-நிலே 24 ரன்களுடனும் (12 பந்து, 4 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் மும்பை பேட்ஸ்மேன்கள் 54 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப்சிங், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பஞ்சாப் அணி 177 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் (11 ரன்) ஏமாற்றினாலும் கேப்டன் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெய்லும் அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். கெய்ல் 24 ரன்னிலும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 24 ரன்னிலும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்கள். மேக்ஸ்வெல் (0) இந்த தடவையும் சொதப்பினார்.


மறுபக்கம் அணியை தாங்கிப்பிடித்து வெற்றியை நோக்கி பயணிக்க வைத்த கேப்டன் லோகேஷ் ராகுல் (77 ரன், 51 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஜஸ்பிரித் பும்ராவின் தாக்குதலில் 18-வது ஓவர் கிளீன் போல்டு ஆனார். இதனால் பரபரப்பு தொற்றியது. கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். இதில் முதல் 5 பந்தில் 7 ரன் எடுத்த பஞ்சாப்புக்கு கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை அடித்த கிறிஸ் ஜோர்டான் (13 ரன்) 2-வது ரன்னுக்கு முயற்சித்த போது ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இதனால் இந்த ஆட்டம் டையில் முடிந்தது. பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. மும்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து சூப்பர் ஓவர் முறை அமல்படுத்தப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 5 ரன்னுக்கு 2 விக்கெட்டையும் இழந்தது. பும்ரா அற்புதமாக வீசி பஞ்சாப்பை கட்டுப்படுத்தினார். பின்னர் 6 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியாலும் 5 ரன்னே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட போது, 2-வது ரன்னை எட்டுவதற்குள் குயின்டான் டி காக் ரன்-அவுட் செய்யப்பட்டார். பஞ்சாப் பவுலர் முகமது ஷமி யார்க்கராக வீசி அசத்தினார். சூப்பர் ஓவரும் சமன் ஆனதால் முடிவை பெற மறுபடியும் சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. அடுத்தடுத்து சூப்பர் ஓவரால் ரசிகர்கள் பரவசமடைந்தனர்.

2-வது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த மும்பை அணி 11 ரன்கள் எடுத்தது. இதில் பொல்லார்ட் தூக்கியடித்த கடைசி பந்தை மயங்க் அகர்வால் எல்லைக்கோடு அருகே சிக்சருக்கு போக விடாமல் தாவி குதித்து தடுத்து 4 ரன்களை மிச்சப்படுத்தினார். அடுத்து 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடியுடன் பஞ்சாப் பேட்டிங் செய்தது. மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட் வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல் அதை சிக்சருக்கு அனுப்பி அமர்க்களப்படுத்தினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது மற்றும் 4-வது பந்துகளை மயங்க் அகர்வால் அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி ஒரு வழியாக தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்ததோடு நீண்ட நேர பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். தொடர்ந்து 5 ஆட்டங்களுக்கு பிறகு மும்பை சந்தித்த முதல் தோல்வியாகும். ஒட்டுமொத்தத்தில் 9-வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
4. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.
5. ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.