மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் மேலும் 26 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை + "||" + TNPSC Abuse case Another 26 people were arrested C.P.C.I.D. Action

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் மேலும் 26 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் மேலும் 26 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) குரூப்-4, குரூப்-2 பட்டியலில் உள்ள அரசு பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேசுவரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 40-க்கும மேற்பட்டோர் முன்னிலை பெற்றனர். குறிப்பிட்ட 2 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரித்த அரசு பணியாளர் தேர்வாணையம் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தது. மேலும் இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தது. இதுதொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. முறைகேடுகளில் தொடர்புடைய தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. அலுவலக உதவியாளர் ஓம்காந்தன் உள்ளிட்ட 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு மட்டுமல்லாது, 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வு, 2016-ல் நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. கைதானவர்களில் சிலருக்கு கிராம நிர்வாக அலுவலர், குரூப்-2ஏ, குரூப் 4 ஆகிய 3 தேர்வுகளிலும் நடைபெற்ற முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தோண்ட, தோண்ட வரும் புதையலைப்போல தினந்தோறும் கைது நடவடிக்கைகளும், அதிர்ச்சி தகவல்களும் வந்த வண்ணம் இருந்தது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் கொரோனா பரவல் காரணமாக அமைதியாகி போனது. இடைப்பட்ட காலத் தில் முறைகேட்டில் தொடர்புடைய சிலர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர்.

ஆனால் இந்த வழக்குடன் தொடர்புடைய யாருக்கும் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்களது கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த வழக்கில் கைது நடவடிக்கை தொடங்கி விட்டது. தினமும் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லாமல் சொந்த ஜாமீனில் விடுவித்து விடுகிறார்கள்.

ஏற்கனவே 71 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களில் மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை அரசு அதிகாரிகள் உள்பட 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இதுவரை 3 தேர்வுகளிலும் முறைகேட்டில் ஈடுபட்ட 97 பேர் கைதாகியுள்ளனர். இவர் களில் தேர்வு எழுதியவர்கள், இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அடங்குவர்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய துறை ரீதியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் 90 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மேலும் 40 பேர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.