ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை + "||" + Farooq Abdullah appears before ED in JCKA money laundering case again
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவிடம் மாநில கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக, ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிதி உதவி வழங்கி வந்தது. கடந்த 2005-2006 நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை ரூ.94 கோடியே 6 லட்சத்தை கிரிக்கெட் வாரியம் அளித்தது.
இந்த பணத்தில் ரூ.43 கோடியே 69 லட்சம் கையாடல் நடந்ததாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. பின்னர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கு தொடர்பாக, பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை அன்று விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டனர்.
இந்நிலையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் பரூக் அப்துல்லா விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.