தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of rain in coastal districts of Tamil Nadu today - Meteorological Center Information
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. மேலும் அதனோடு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்து இருக்கிறது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் இன்று (வியாழக்கிழமை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘அரிமளம் 6 செ.மீ., வேடசந்தூர், தேவாலா தலா 5 செ.மீ., மதுரை விமானநிலையம், தளி, பள்ளிப்பட்டு, பெரம்பூர் தலா 4 செ.மீ. திருமங்கலம், அருப்புக்கோட்டை, திருத்தணி, பரூர், கோவை, ஆரணி, காரைக்குடி, செங்குன்றம், வாணியம்பாடி தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.