மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஆயுட்காலமாக நீட்டிப்பு - தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு + "||" + Teacher Qualification Certificate Lifetime Extension Decided at the meeting of the National Council of Teacher Education

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஆயுட்காலமாக நீட்டிப்பு - தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஆயுட்காலமாக நீட்டிப்பு - தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஆயுட்காலமாக நீட்டிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை,

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதன்படி, கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை தான் செல்லும். அதற்குள் அதை வைத்து ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துவிட வேண்டும். இது மிகவும் குறுகிய காலமாக இருப்பதாகவும், ஆயுட்காலமாக நீட்டிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) 50-வது பொதுக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த கூட்டத்துக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் துணை செயலாளர் அனில் குமார் சர்மா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழை ஆயுட்காலமாக நீட்டிப்பது, தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு இருக்கும் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு நடைமுறைக்கு வரும்போது, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பேராசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கான தகுதியை மறுஆய்வு செய்வதற்கு பேராசிரியர் வந்தனா சக்சேனா தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்பது உள்பட 9 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆயுட்கால சான்றிதழ் நீட்டிப்பு இனிவரும் நாட்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி சான்றிதழ் பெற்று இருப்பவர்களுக்கு ஆயுட்கால சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு வரவேற்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் வெற்றிபெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச்சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்றும், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழையும் நிரந்தரமாக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு ஆகும்’ என்று கூறியுள்ளார்.