மாநில செய்திகள்

விலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம் + "||" + Egyptian onions re-imported due to inflation

விலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்

விலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்
விலை ஏற்றம் காரணமாக மீண்டும் எகிப்து வெங்காயம் தமிழகத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கிறது. சுவை இல்லாவிட்டாலும் அதனை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகள் இருக்கின்றனர். ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்லாரி வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதி வரை ஒரு கிலோ ரூ.50 என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் மராட்டிய மாநிலம் நாசிக், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாரி வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த பகுதிகளில் இருந்து வரத்து குறைந்ததன் காரணமாக அதன் விலை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

நாளொன்றுக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மட்டும் நாசிக், ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து சுமார் 70 லாரிகளில் பல்லாரி வெங்காயம் வரத்து இருக்கும். அதேபோல், தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் வெங்காயம் வரத்து இருந்தது.

ஆனால் தற்போது விளைச்சல் குறைந்து வரத்து பெருமளவில் சரிந்து இருப்பதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு நாசிக்கில் இருந்து வெறும் 20 லாரிகளிலும், கர்நாடகாவில் இருந்து 5 முதல் 6 லாரிகளிலும் தான் வெங்காயம் வரத்து இருக்கிறது. இதுதவிர ஆந்திராவில் விளைச்சல் முற்றிலும் இல்லாததால் அங்கிருந்து வரத்து சுத்தமாக இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் (நாசிக் வெங்காயம்) ரூ.100 முதல் ரூ.115 வரை மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயத்தின் விலை அதனை விட சற்று குறைவாக விற்பனை ஆகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே பேசப்படுகிறது.

கடந்த ஆண்டும் இதேபோல், வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்தது. அந்த சமயத்தில் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை ஆனது. அப்போது விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வெளிநாட்டு வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எகிப்து வெங்காயம் மீண்டும் களம் இறக்கப்பட்டு இருக்கிறது. எகிப்தில் இருந்து கப்பல் மூலம் தமிழகத்துக்கு சுமார் 140 டன் வரை வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தலா 25 டன் வீதம் 2 கண்டெய்னர்களில் 50 டன் வரையில் நேற்று விற்பனைக்கு எகிப்து வெங்காயம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

தேவையை பொறுத்து இனிவரும் நாட்களில் எகிப்து வெங்காயத்தின் வரத்து இருக்கும் என்றும், எகிப்து வெங்காயத்தை தொடர்ந்து துருக்கி வெங்காயமும் அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் எகிப்து வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகிறது. இந்தியாவில் விளையும் வெங்காயத்தின் விலையை விட எகிப்து வெங்காயம் விலை குறைவாக இருந்தாலும், அதன் சுவை மிகவும் குறைவாகவே தான் இருக்கும் என்று கடந்த ஆண்டே வியாபாரிகள் தெரிவித்தனர். சுவை இல்லாவிட்டாலும், சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இல்லத்தரசிகள் தற்போது தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

பல்லாரி வெங்காயத்தை போலவே, சாம்பார் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ஆன சாம்பார் வெங்காயம், தற்போது ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல்லாரி வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டாலும், சாம்பார் வெங்காயத்தை பொறுத்தவரையில் மொத்த மார்க்கெட்டில் என்ன விலைக்கு விற்பனை ஆகிறதோ? அதே விலையில் தான் விற்பனை ஆகிறது. எனவே பல்லாரி வெங்காயத்தை போலவே, சாம்பார் வெங்காயத்தின் விலையையும் கட்டுப்படுத்த அதன் விலையை குறைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.