தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகன் தேர்வு + "||" + wage worker son selected for national level hockeytraining camp
தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகன் தேர்வு
தமிழக அரசு சார்பில் கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் மதிப்பில் ஹாக்கி சர்வதேச செயற்கை புல்வெளி பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது.
கோவில்பட்டி
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. 100 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை "ஹாக்கிபட்டி" எனவும் அழைப்பர். தேசிய ஹாக்கி அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர். இந்த சூழலில் களிமண் தரையில் விளையாடும் தங்களுக்கு செயற்கை புல்வெளி மைதானம் அமைத்து தர வேண்டும் என வீரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி தமிழக அரசு சார்பில் கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச செயற்கை புல்வெளி பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது.
அந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர் சக்திவேல் மகன் மாரீஸ்வரன் மற்றும் அரியலூரை சேர்ந்த கார்த்தி ஆகியோர் பெங்களூருவில் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள இந்திய ஜீனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகி உள்ளனர். சிறுவயது முதலே ஹாக்கி விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருந்ததாகவும் தற்போது இந்திய ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறுகிறார் மாரீஸ்வரன்.
தனது மகன் படிக்காமல் விளையாட்டில் ஆர்வமாக இருந்தது வருத்தமாக இருந்ததாக கூறும் அவரது தந்தை சக்திவேல், அந்த வருத்தம் தற்போது இல்லை என தெரிவித்தார். மேலும் தனது மகன் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி தமிழகத்திற்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறி உள்ளார் மாரீஸ்வரன் தந்தை.