வெள்ள பாதிப்பு; மத்திய அரசிடம் கூடுதல் நிவாரண தொகை கேட்போம்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு + "||" + Flood damage; Let's ask the central government for additional relief: Karnataka CM announcement
வெள்ள பாதிப்பு; மத்திய அரசிடம் கூடுதல் நிவாரண தொகை கேட்போம்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு
கர்நாடக வெள்ள பாதிப்பிற்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிவாரண தொகையை கேட்போம் என முதல் மந்திரி எடியூரப்பா இன்றிரவு அறிவித்து உள்ளார்.
பெங்களூரு,
வடகிழக்கு பருவமழையையொட்டி மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தெலுங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த வார இறுதியில் பெய்த கனமழையால் 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதேபோன்று கர்நாடகத்தில் கனமழை பொழிவால் பல்வேறு மாவட்டங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வெள்ளம் பாதித்த 5 மாவட்டங்களை மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஆர். அசோகா மற்றும் பிரபு சவுகான் உள்ளிட்டோருடன் முதல் மந்திரி எடியூரப்பா இன்று வான்வழியே சென்று பார்வையிட்டார். வெள்ள சேதங்களை மதிப்பிட்டார்.
இதுபற்றி முதல் மந்திரி இன்றிரவு செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாங்கள் வெள்ளம் பாதித்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் முன்பே வழங்கி இருக்கிறோம். கர்நாடக வெள்ள பாதிப்பு நிலைமை பற்றி மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். கூடுதல் நிவாரண தொகை வழங்கும்படி அரசிடம் நாங்கள் கோரிக்கை வைப்போம் என கூறியுள்ளார்.
இதன்பின்னர் தொடர்ந்து அவர் கூறும்பொழுது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இதற்காக அதிகாரிகளிடம் நான் அறிக்கை கேட்டுள்ளேன். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கூடுதல் நிதியை விடுவிப்பது பற்றி நாங்கள் ஆலோசனை மேற்கொள்வோம். தேவைக்கேற்றபடி நிதி விடுவிக்கப்படும் என கூறியுள்ளார்.