மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் எவை? - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + In 5 newly formed districts in Tamil Nadu What are the featured assembly constituencies? Election Commission of India Notice

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் எவை? - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் எவை? - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் பற்றிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் சமீபத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அந்த வகையில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாகியுள்ளன.

இந்த 5 புதிய மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியலை தனியாக உருவாக்கும் வகையில், அந்த மாவட்ட கலெக்டர்களை மாவட்ட தேர்தல் அதிகாரியாக அங்கீகரித்து சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், 4 மாவட்டங்கள் மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட 5 புதிய மாவட்டங்கள் ஆகியவற்றுக்கான சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தற்போதுள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றன. அதிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்குள், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும்; ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளும்; திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் அடங்குகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளும்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கரா புரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 தொகுதிகளும் வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும்; தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளும் அடங்குகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.