உலக செய்திகள்

கைகள் இல்லாமல் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்தும் நபர் + "||" + Awesome person in the game of snooker without hands

கைகள் இல்லாமல் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்தும் நபர்

கைகள் இல்லாமல் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்தும் நபர்
பாகிஸ்தானில் கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.
லாகூர்,

பாகிஸ்தானில் 33 லட்சம் மாற்று திறனாளிகள் உள்ளனர்.  ஆனால், 21 கோடி மக்கள் தொகையில் 13 சதவீதத்தினர் அளவுக்கு மாற்று திறனாளிகள் உள்ளனர் என்று மற்றொரு ஆய்வு தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாமுந்திரி நகரில் வசித்து வருபவர் முகமது இக்ரம் (வயது 32).  9 பேர் கொண்ட ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் ஒருவராக பிறந்த இக்ரம் பள்ளி படிப்பு கிட்டாதவர்.  உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பண வசதி இல்லாதவர்.  இவர் சிறு வயதில் இருந்து ஸ்னூக்கர் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

ஆனால், இவருக்கு இரு கைகளும் இல்லை.  இதுபற்றி அவரது தாயார் ரசியா பீபீ கூறும்பொழுது, மற்ற சிறுவர்கள் விளையாடும்பொழுது ஆவலுடன் பார்ப்பான்.  நமக்கும் கைகள் இருந்ததென்றால் நாமும் மற்றவர்களை போன்று விளையாட முடியும் என நினைத்து கொள்வான் என கூறினார்.

இதன்பின்னர் இக்ரம் தனது முகவாய் கட்டை பகுதியை (வாய்க்கு கீழுள்ள பகுதி) கொண்டு பயிற்சி பெற தொடங்கியுள்ளார்.  இந்த எண்ணம் எப்படி உதித்தது என்பது பற்றி தனக்கு நினைவில்லை என கூறும் இவர், யாருக்கும் தெரியாமல் ரகசியம் ஆக பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.

இலக்கு நிர்ணயித்து கொண்டு கழுத்து வளைத்து, தாடையை கொண்டு பந்துகளை அடித்து சரியாக குழியில் விழ வைக்கிறார்.  கடந்த 2 ஆண்டுகளில் பல உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

சில உணவகங்கள் காசு வாங்காமல் சாப்பிட இவரை அனுமதிக்கின்றன.  உணவு சப்ளை செய்பவர்கள் அவருக்கு ஸ்பூன் கொண்டு உணவு ஊட்டும் தன்னார்வலர்களாகவும் செயல்படுகின்றனர்.

இதுபற்றி இக்ரம் கூறும்பொழுது, கடவுள் எனக்கு கைகளை கொடுக்கவில்லை.  ஆனால் தைரியம் அளித்துள்ளார்.  எனது நோக்கம் நிறைவேற அந்த உணர்வை நான் பயன்படுத்தி வருகிறேன்.  அதனால், ஒருவரும் உங்களது நம்பிக்கையை இழக்க வேண்டாம் என மற்ற மாற்று திறனாளிகளுக்கு கூற விரும்புகிறார்.

அரசின் உதவியால் சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடும் ஒரு நாள் வரும் என இக்ரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.