இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் அபகரிக்க விட மாட்டோம் - ராஜ்நாத் சிங் + "||" + Want to end border tension with China but will not cede an inch of land: Rajnath Singh in Darjeeling
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் அபகரிக்க விட மாட்டோம் - ராஜ்நாத் சிங்
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம் என்று பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
சிம்லா,
லடாக் மோதலால் இந்தியா-சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலங்களுக்கு சென்றுள்ளார். இதில் நேற்று டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவு தளத்துக்கு சென்று பார்வையிட்ட அவர், அந்த வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
சிக்கிம் பகுதியில் இந்தியா-சீனா அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை பாதுகாத்து வரும் இந்த படைப்பிரிவினருடன், ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங், எல்லை நிலவரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மாநிலம் டார்ஜீ லிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இயந்திர துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்களுக்கு சாஸ்திரா பூஜை எனும் சிறப்பு பூஜையை செய்து ராஜ்நாத் சிங் வழிபாடு நடத்தினார்.
சீனாவின் நடவடிக்கையால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருவதை சுட்டிக் காட்டிய ராஜ்நாத்சிங், சுமூகமான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் எனவும், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்தார். மேலும் எங்கள் நிலத்தின் ஒரு அங்குலம் கூட அபரிக்க இந்திய இராணுவம் யாரையும் அனுமதிக்காது என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
ராஜ்நாத் சிங் சிக்கிமில் உள்ள ஷெராதாங்கில் "சாஸ்திர பூஜை" கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தார். இதனிடையே சீரற்ற வானிலை காரணமாக அங்கு செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.