வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் மற்றொரு மசோதா கொண்டு வரப்படும்; காங்கிரஸ் கட்சி அறிவிப்பு + "||" + Another bill will be brought in the Rajasthan Assembly against agricultural laws; Congress Party Announcement
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் மற்றொரு மசோதா கொண்டு வரப்படும்; காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டசபையில் மத்திய அரசின் வேளாண்சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்படும் என காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கடந்த மாதம் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அம்மசோதாக்கள் சட்டவடிவம் பெற்றுள்ளன.
இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், சில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வேளாண் சட்டங்களை முறியடிக்க மாநில சட்டசபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் முதல்-மந்திரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதை ஏற்று, பஞ்சாப் சட்டசபையில் 4 மசோதாக்கள் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. அதனுடன் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று, தனது அரசாங்கமும் பஞ்சாப் போன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதாவை கொண்டு வரும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கூறினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தேசிய பொது செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நம்முடைய விவசாயிகளையும் மற்றும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு உள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் அரசு வருகிற 31ந்தேதி மசோதா ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.