மாநில செய்திகள்

திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு + "||" + Trichy-Nagercoil Intercity Express Rail Extension to Thiruvananthapuram

திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு

திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு
திருச்சியில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
சென்னை,

திருச்சியில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால், தமிழக பயணிகளுக்கு பயனில்லாமல் எந்த வசதியும் இல்லாத நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக அப்போது இயக்கப்பட்டு வந்தது.

கோட்டாரில் அமைந்துள்ள நாகர்கோவில் சந்திப்பு ரெயில்நிலையத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் இந்த ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டதால் ரெயில் உரிய நேரத்திற்கு வந்து செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பாக நெய்யாற்றின்கரை-குழித்துறை வழித்தடத்தில் மழைக்காலங்களில் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுவதால் இந்த ரெயில் போக்குவரத்து சில நேரங்களில் தடைபடுகிறது.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் இந்த ரெயில் நாகர்கோவில் வரை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடைகிறது. இதனால், தென்மாவட்ட பயணிகள் அதிகம் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் திருவனந்தபுரம் வரை மீண்டும் இயக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த ரெயில் 30-ந் தேதியில் இருந்து (வ.எண் 02627) திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9.58 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மாலை 3.20 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் (வ.எண்.02628) திருவனந்தபுரத்தில் இருந்து பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். இரவு 7.55 மணிக்கு திருச்சி ரெயில்நிலையம் சென்றடையும். இந்த ரெயில் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.