மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள தனது கட்சி தலைவர் வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்வதற்கு தான் புல்வாமா செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார். தனது இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.
இதுபற்றி போலீசார் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளனர். அதில் அவர்கள், “மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களையொட்டி அவர் தனது புல்வாமா பயணத்தை ஒத்தி போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்” என கூறி உள்ளனர்.
மெகபூபா முப்தி மீண்டும் தடுப்புக்காவலிலும், அவரது மகள் வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு தேசிய மாநாடு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.