மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுதினம் வருகை + "||" + Central team to visit Tamil Nadu and Pondicherry tomorrow to assess storm damage

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுதினம் வருகை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுதினம் வருகை
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்திற்கு வருகின்றனர்.
சென்னை,

இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்வது வழக்கமாக உள்ளது. முன்னதாக பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நிவர் புயல் வீசியது. அப்போது காற்று பலமாக வீசியதோடு கன மழையும் பெய்தது. இதனால் ஏராளமான வாழை, தென்னை போன்ற மரங்கள் சரிந்தன. நெல் உள்ளிட்ட பயிர்கள் நீருக்குள் மூழ்கின. பல கால்நடைகள் இறந்ததோடு வீடுகளும் சேதமடைந்தன.

இவற்றுக்கு இழப்பீட்டை வழங்கும்படி மக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். நிவாரண உதவிகளை வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்திருந்தனர்.

இந்த நிலையில் நிவர் புயல் ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய அரசு, குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த குழு டிசம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவில் டெல்லியில் உள்ள மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் (செலவினங்கள்), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய மின்சார துறை செயலாளர், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர், மத்திய மீன்வளத்துறை செயலாளர், மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆகிய 7 பேர் இடம் பெற்று உள்ளனர். டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்திற்கு வரும் அவர்கள், 2-ந் தேதி புயல் பாதித்த இடங்களுக்குச் செல்கிறார்கள். இங்கு வந்த பிறகு எந்தெந்த இடத்துக்குச் சென்று பார்வையிடுவது என்பதுபற்றி முடிவு செய்வார்கள்.

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சேதமடைந்த விளை நிலங்கள், மா, தென்னை, வாழை விவசாயம் செய்யப்பட்ட பகுதிகளையும் பார்வையிடுவார்கள். தமிழகத்தில் பார்வையிட்ட பின்பு புதுச்சேரிக்குச் சென்று அங்கு புயல் ஏற்படுத்திய சேதங்களை மதிப்பீடு செய்வார்கள்.

சேதமடைந்தவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பதை கணக்கிட்டு அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் பின்னர் வழங்குவார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரும் அவர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி
தமிழகத்தில் இன்று ராகுல்காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.
3. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.