குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை; கண்காணிப்பு பணியில் 1000 போலீசாரை ஈடுபடுத்த முடிவு + "||" + Ban on New Year celebrations in Kanyakumari; Decided to involve 1000 policemen in surveillance
குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை; கண்காணிப்பு பணியில் 1000 போலீசாரை ஈடுபடுத்த முடிவு
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் உள்ள ஓட்டல்களில் டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் கடற்கரை பகுதிகளிலும் இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது உண்டு.
ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு ஒரு பகுதியாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. அதேபோல் ஓட்டல்கள், லாட்ஜ்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரத்தில் வழக்கமான புத்தாண்டு மத வழிபாடுகளுக்கு எந்த தடையும் இல்லை. சாலைகளில் நள்ளிரவு நேரங்களில் கேக் வெட்டி, கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபட கூடாது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் ரேஸ் செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதற்காக 1,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (வியாழக்கிழமை) மாலையில் இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். முக்கியமான பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெறும்.
அருமனையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். கிறிஸ்துமஸ் விழா மதநல்லிணக்க மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.