கிரிக்கெட்

சிட்னியில் இனவெறி கோஷம்: இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் - அஸ்வின் வலியுறுத்தல் + "||" + Faced abuses in Sydney earlier too, now they have crossed line with racism: Ashwin

சிட்னியில் இனவெறி கோஷம்: இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் - அஸ்வின் வலியுறுத்தல்

சிட்னியில் இனவெறி கோஷம்: இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் - அஸ்வின் வலியுறுத்தல்
சிட்னியில் இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறி கோஷமிட்ட சம்பவத்திற்கு இந்திய அணி வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.  இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர்.

3வது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில்சன் மற்றும் போட்டி நடுவர் டேவிட் பூன் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார். மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை வீடியோ பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இன்றைய 4வது நாள் ஆட்டத்தில், சிராஜ் பந்து வீசிய பின்னர் பும்ரா பந்து வீசுவதற்கு முன் வந்தபோது பவுண்டரி கோட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.  ரஹானே, நடுவரை நோக்கி சென்றார்.  சக வீரர்களுடம் அவருடன் சென்றனர்.

இன்றைய போட்டியிலும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீண்டும் இனவெறி கோஷம் எழுந்துள்ளது.  இதுபற்றி இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்துள்ளனர்.  இதனால், போட்டி இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. போட்டி நடுவர்களும், இந்திய வீரர்களும் சில நிமிடங்கள் வரை பேசி கொண்டனர்.

இதன்பின்னர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.  பார்வையாளர்கள் பகுதியில் சில வரிசைகள் காலியாக விடப்பட்டன. இதன்பின்பு போட்டி தொடர்ந்தது.

இதனைத்தொடர்ந்து இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இனவெறியை ஆதரிப்பவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது. இந்திய கிரிக்கெட் அணி நண்பர்களிடம் நாங்கள் வருத்தங்களை பதிவு செய்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய அணி வீரர் ஆர்.அஸ்வின், “ஆஸ்திரேலியாவுக்கு இதற்கு முன் நான் வந்தபோதுகூட ரசிகர்கள் மத்தியில் இனவெறியுடன் கூடிய பேச்சை எதிர்கொண்டிருக்கிறேன். ஆதலால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறியுடன் பேசுவது ஒன்றும் புதிதல்ல. நான் மட்டுமல்ல பல இந்திய வீரர்களும் சிட்னியில் விளையாடும்போது இதுபோன்ற இனவெறிப் பேச்சை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த முறை புகார் அளித்துள்ளோம். இது போன்ற சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 
Related Tags :