கிரிக்கெட்

இனவெறி விவகாரம்: கடும் நடவடிக்கை எடுப்போம்; கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு + "||" + Racism: We will take drastic action; Cricket Australia announcement

இனவெறி விவகாரம்: கடும் நடவடிக்கை எடுப்போம்; கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

இனவெறி விவகாரம்:  கடும் நடவடிக்கை எடுப்போம்; கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு
டெஸ்ட் போட்டியில் இனவெறி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.
சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.  இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர்.

3வது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில்சன் மற்றும் போட்டி நடுவர் டேவிட் பூன் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார். மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை வீடியோ பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இன்றைய 4வது நாள் ஆட்டத்தில், சிராஜ் பந்து வீசிய பின்னர், பும்ரா பந்து வீசுவதற்கு முன்வந்த போது பவுண்டரி கோட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.  ரஹானே, நடுவரை நோக்கி சென்றார்.  சக வீரர்களுடம் அவருடன் சென்றனர்.

இன்றைய போட்டியிலும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீண்டும் இனவெறி கோஷம் எழுந்துள்ளது.  இதுபற்றி இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்துள்ளனர்.  இதனால், போட்டி இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.  போட்டி நடுவர்களும், இந்திய வீரர்களும் சில நிமிடங்கள் வரை பேசி கொண்டனர்.

இதன்பின்னர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.  பார்வையாளர்கள் பகுதியில் சில வரிசைகள் காலியாக விடப்பட்டன.  இதன்பின்பு போட்டி தொடர்ந்தது.

டெஸ்ட் போட்டியில் இனவெறி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.  இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்புக்கான தலைவர் சீன் கேரல் கூறும்பொழுது, சிராஜ் மற்றும் பும்ரா மீது இனவெறியை தூண்டும் வகையில் நடந்து கொண்ட சர்ச்சைக்குரிய ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதுபோன்ற வேற்றுமைக்கான அனைத்து அணுகுமுறைகளையும் எங்களுடைய வாரியம் கடுமையாக கண்டிக்கிறது.  இனவெறி துவேசத்தில் ஈடுபடுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், இங்கே வரவேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசாரணை முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் கூறினார்.  இதில் கண்டறியப்படும் ரசிகர்களுக்கு நீண்டகால தடை, போலீசாருக்கு பரிந்துரை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்திய அணியில் உள்ள எங்களுடைய நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.  இந்த விவகாரம் பற்றி முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறோம் என்றும் கேரல் தெரிவித்துள்ளார்.